14 வலைபதிவுகள் வரப்பிரசாதம்

என்னுடைய உண்மையான பிறந்த நாளே எனக்கு 20 வயதில் தான் தெரிந்தது. அப்போது தீவிர ஜோதிட ஆராய்ச்சியில் முழு நேரமாய்ச் செயல்பட்டுக் கொண்டிருந்த நண்பன் கலந்தர் (மத எதிர்ப்புகளையும் மீறி) உந்துதல் காரணமாக நான் பிறந்த அரசு மருத்துமனையில் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகே கண்டு கொண்டேன். நான் பிறந்த நாளை கொண்டாடியதும் இல்லை. பிறந்த நாள் வரும் தினத்தன்று அது நினைவில் இருப்பதும் இல்லை.

குழந்தைகள் எனது வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய அவர்களின் பிறந்த நாளை நாங்கள் மறந்து விடுவோம் என்று ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதத்திற்கு முன்பாக இன்னும் இத்தனை மாதங்கள் இருக்கிறது? என்று சுட்டிக் காட்டிக் கொண்டே இருப்பார்கள். அன்று அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சி தான் எங்களின் மகிழ்ச்சியாகவும் இருந்து விடுகின்றது.

வலைப்பூவில் தொடக்கத்தில் எழுத வருபவர்களும் திரைப்படங்களைப்பற்றி எழுதுவது தான் சரியாக இருக்கும் என்று தங்கள் எழுத்துப்பயணத்தைத் திரை சமாச்சாரங்களில் மட்டும் கவனம் செலுத்தி அதன் பாதையிலே போகத் தொடங்கி விடுகிறார்கள். வேர்ட்ப்ரஸ் ல் எழுதும் போது சிவகுமார், சேரன், கமல்ஹாசன் குறித்து எழுதியுள்ளேன். குறிப்பாகத் திரைப்படங்களைப் பற்றி நான் இதுவரையிலும் எழுதியதில்லை.

வினவு தள நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்காக முதல் முறையாகத் திருப்பூர் சாயப்பட்டறைகள் குறித்து எழுதிய கட்டுரை அப்போதையைச் சூழ்நிலையில் சொல்ல வேண்டிய எதிர்மறை நேர்மறை நியாங்களைக் கோர்வையாக்கியதில் நீண்டதாகவே இருந்தது. தோழர்களும் அப்படியே வெளியிட்டு இருந்தார்கள். அப்போது உயர்பதவியில் உள்ள கனடாவில் இருந்த நண்பர் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தார்.

ஆனால் குறிப்பிட்ட காலம் வரைக்கும் தொடர்பு கொள்ளவில்லை. ஆனால் சாயப்பட்டறை கட்டுரையை விட மராத்தான் நீளத்திற்கு அமைந்த நான் வேட்பாளர் ஒரு டைரிக்குறிப்புகள் என்ற கட்டுரையை அவர் படித்தவுடன் அந்த இரவு வேளையில் கனடாவிலிருந்து அழைத்து ஏறக்குறைய இரண்டு மணி நேரம் பேசினார்.

அப்போது அவர் பலவிசயங்களைப் பற்றிப் பேசினாலும் இன்று உங்களுடன் பேசியே ஆக வேண்டும் என்று என் இரவு நேர கடமைகளை ஒதுக்கிவைத்து விட்டேன் என்று சொன்ன போது அந்தக் கட்டுரை எந்த அளவுக்கு அவருக்குத் தாக்கத்தை உருவாக்கியது என்பதை உணர்ந்து கொண்டேன்.

உங்கள் எழுத்து நடையும், சொல்ல வந்த விசயத்திற்குரிய சரியான புரிதலையும் உருவாக்கும்பட்சத்தில் அது எந்த அளவுக்குப் பெரிதாக இருந்தாலும் நிச்சயம் அது பரவலான பாராட்டுரைக்குக் கொண்டு செலுத்தும். நீங்கள் விமர்சனங்கள், ஓட்டு, பரஸ்பரம் மார்பில் சந்தணத்தைப் பூசிக் கொண்டிருந்தால் வாழ்க்கை ுழுக்கப் பூசிக் கொண்டேயிருக்க வேண்டியது தான்.

சுயமோகம், சுயவிளம்பரம், அதிகச் சுயபுராணம் எதுவுமின்றி இந்த வலைபதிவுகளை முடிந்தவரைக்கும் செய்திகளைக் கடத்தும் ஊடகமாகத் தான் கருதுகின்றேன். வெகுஜன ஊடகத்தை விட இந்த வலைபதிவுகளின் உண்மையான மதிப்பை இன்னும் சில ஆண்டுகளில் தமிழர்கள் உணர்ந்து கொள்ளக்கூடும்.

பிரபல்யமான தொலைக்காட்சிகள் கூடச் செல்லமுடியாத தீவுப் பிரதேசங்களில் இந்த வலைபதிவுகள் வெளியிட்ட அடுத்த நிமிடங்களில் பார்க்க, படிக்க வாய்ப்புள்ள இந்த ஊடகத்தின் மதிப்பை உணர்ந்து செயல்படுவர்களும் இருக்கிறார்கள்.

என் ீட்டு தோட்டத்தின் வெளியே திரிந்த சிட்டுக்குருவி ஒன்று ஒவ்வொரு நாளும் அறைக்குள் வர பிரயாசைப்பட்டுக் கொண்டிருப்பதைப் பல முறை கவனித்துள்ளேன். கண்ணாடி ஜன்னலை முட்டி முட்டி முயற்சிப்பதைப் போலத் தான் இந்த எழுத்துப் பயணம் எனக்குப் பலவற்றை உணர்த்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விசயத்தையும் தொட ஆரம்பிக்க, அதைப் பற்றிய தேடல் தொடங்க அவற்றைக் குறித்து எழுதத் தொடங்கிய பின்பு தான் சரித்திர அறிவும், அதிக அளவில் சமூக அறிவும் எனக்குக் கிடைக்கப் பெற்றது.

பொருள் தேடுவதும், கிடைத்த பொருளை காப்பாற்றுவதுமே இப்போதைய சமூகத்தில் முக்கியமாக இருக்கிறது. அதனை வைத்தே இங்கே ஒவ்வொரு மனிதர்களுக்கும் மதிப்பீடு கிடைக்கின்றது. மனிதர்கள் அத்தனை பேர்களுமே சந்தைச் சரக்காக இருக்கும் சூழ்நிலையில் எனக்குள் உருவாகும் மன அழுத்தத்தைப் போக்க இந்த எழுத்துப் பயிற்சி பலவற்றையும் எனக்குக் கற்றுத் தந்துகொண்டஇருக்கிறது..

இந்த வலைபதிவுகளில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் படிப்பவர்களின் சிந்தனைகளில் முழுமையான மாறுதல்களை உருவாக்க முடியாத போதும்கூட அவரவர் கொண்ட சிந்தனைகளை உரசிப் பார்க்கக்கூடிய வகையில் என் எழுத்துக்கள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஒவ்வொன்றையும் எழுதியுள்ளேன். தொலை தூரத்தில் இருந்து திடீர் என்று அழைத்துப் பேசியவர்களும், தொடர்பில் வரும் நண்பர்கள் பேசும் உரையாடலின் மூலமே மட்டுமே பலரும் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர முடிகின்றது.

ஈழம் பற்றி நான் அதிகமாக எழுதக் காரணம் அதைப்பற்றித் தான் இரண்டு வருடங்களில் நிறையப் படித்துள்ளேன்.

மூன்று பெண் குழந்தைகளின் பெயர்களின் இறுதியில் தேவி என்று பெயர் வருவதால் எனது ஆசான் மூத்த பத்திரிக்கையாளர் முத்து முருகேசன் தான் தேவியர் இல்லத்துக் குழந்தைகள் நலமும் வளமும் பெற வாழ்த்துக்கள் என்று ஒரு முறை குழந்தைகளின் பிறந்த நாளின் போது அவர்களின் நோட்டில் எழுதிக் கொடுத்து வாழ்த்துரைத்தார்.

அதையே வலைதளத்திற்குப் பெயராகவும் வைத்துள்ளேன். வேறெதும் சிறப்பான காரணங்கள் ஒன்றுமில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகளின் கையில் இப்போது இந்த மடிக்கணினி விளையாட்டுப் பொருளாக மாறி என்னைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். (07.03.2011)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *