12 பாவம் அப்பாக்கள்

வாசித்து முடிக்க முடியாத பெரிய புத்தகத்தைப் போல, வாசித்தாலும் புரிந்து கொள்ள முடியாத எழுத்து நடையைப் போலத்தான் அப்பாக்கள் இருக்கின்றார்கள். கிராமத்து, நகர்புறங்களில் வாழும் அப்பாக்கள் என்று வகையாகப் பிரிக்கலாமே தவிரக் காலம் காலமாக அப்பாக்களுக்கும் மகன்களுக்கும் உண்டான சீனப்பெருஞ்சுவர்இன்று வரையிலும் உடைந்த பாடில்லை. சாதாரண மனிதர்கள் முதல் வாழ்வில் சாதித்த சாதனையாளர்கள் வரைக்கும் தங்களின் வாழ்க்கை உயர்வுக்குக் காரணமென அவரவர் அம்மாக்களைத்தான் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

விதையாக இருக்கும் அப்பாக்கள் காலப்போக்கில் விரும்பப்படாதவர்களின் பட்டியலில் போய்ச் சேர்ந்து விடுகின்றார்கள்.

நான் ழுதத் தொடங்கிய போது அப்பாவைப்பற்றித்தான் எழுதினேன். அது சரியா? தவறா? என்று கூடத் தெரியாமல் அவரால் உருவாக்கப்பட்ட தாக்கத்தை எழுத்தாக மாற்றி என் எழுத்துப் பயணத்தைத் தொடங்கினேன். எழுதி முடித்த போது நம்பிக்கை வந்தது. எழுதுவற்கு நமக்கு விசயம் இருக்கிறது என்ற எண்ணம் உருவானது. தொடர்ந்து எழுத முடிந்தது. உள்ளுற இருக்கும் ஓராயிரம் அனுபவங்களை எழுத்தாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை வந்தது.

நம்மால் முடியுமா? என்பதன் தொடர்ச்சி தான் தவறாக வந்து விடுமோ? என்ற எண்ணம். நம் தைரியமே முதல் அடியை எடுத்து வைக்க உதவும். உள்ளுற உழன்று கொண்டிருக்கும் வரையிலும் எந்தக் கருத்துக்களும் சிந்தனைகளாக மாறாது. நம் திறமைகளும் வெளியே வருவதில்லை.

நமக்கு இப்படி ஒரு திறமை உண்டா? என்பதைக்கூடத் தெரிந்து கொள்ள முடியாத அளவுக்குத்தான் நம் அன்றாட நெருக்கடிகள் பலரையும் அல்லாட வைத்துக் கொண்டிருக்கிறது. ாம் உணரவே வாய்ப்பில்லாத திறமைகளை நாம் வாழ்க்கையில் உருவாகும் நெருக்கடியான சந்தர்ப்பங்கள் காட்டிக் கொடுத்து விடும். நம்மால் இது முடியுமா? என்ற யோசனை மாறி நாம் இத்தனை நாளும் உணராமல் இருந்துள்ளோமே? என்று வெட்கபட வைக்கும் அப்படித்தான் இந்த எழுத்துப் பயணம் உருவானது. முழுமையான மனிதர்கள் என்று இங்கு எவருமே இல்லை.

எல்லோருமே ஏதோவொருவகையில் அரைகுறையாகத் தான் இருக்கின்றோம். ஆனால் நாம் அதை நாம் ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை. அவரவர் சாதனைகளின் அளவுகோல் வேறானதாக இருக்குமே தவிர அதுவும் ஒரு சாதனை தான் என்பதனை உணர்ந்தவர்களின் எண்ணிக்கை சொற்பமே.

வாழ்வில் சாதித்தவர்களிடம் உள்ள சல்லித்தனமான புத்திகளும், வாழ்க்கை முழுக்கச் சங்கடங்களுடன் வாழ்ந்தாலும் தரமாக வாழ்க்கை நடத்துபவர்களும் என நம்மைச்சுற்றியுள்ள கூட்டுக்கலவை மனிதர்கள் மூலமே நாம் பலவற்றைக் கற்றுக் கொள்ள முடிகின்றது. நாம் தனை எந்த அளவுக்கு உணர்ந்துள்ளோம்? எப்படி உள்வாங்கியுள்ளோம்? என்பதில் தான் நம் வளர்ச்சியும் அடங்கியுள்ளது.

ஒரு தனி மனிதனின் குணாதிசியங்களில் பெற்றோர்களின் அறிவுரையும் ஆலோசனைகளும் கால் பங்கு தான் ஆதிக்கம் செலுத்துகின்றது. ஒருவன் வளரும் சூழ்நிலை தான் அவனை உருவாக்குகின்றது. காலம் அவனை உருவமாக்கின்றது.

தவறான பாதைகளில் சென்றால் தான் சீக்கிரம் முன்னேற முடியும்? என்று எந்தப் பெற்றோராவது தங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்க்கின்றார்களா? எந்த ஊரில் வாழ்ந்தாலும், குழந்தைகளுக்குக் காலம் காலமாகப் புராண இதிகாசங்களையும், நன்னெறி நூல்களில் உள்ள உபதேச கருத்துக்களையும் தானே பெற்றோர்களும் ஆசிரியர்களும் சொல்லிக் கொடுக்கின்றார்கள். நாகரிகம் வளர்ந்துள்ளது என்று நம்பப்படும் இந்தக் காலத்தில் வக்கிர மனிதர்களின் எண்ணிக்கையும் அதிகமாகத் தானே உள்ளது. இங்குத் தான் புரிதலில், உணர்தலில் உள்ள தவறுகளும் சேர்ந்து கூட்டுக்கலவையாகி மனித எண்ணங்களாக மாறிவிடுகின்றது.

இங்கே எழுத்தாளர்களுக்குப் பஞ்சமில்லை. எழுதியவர்களின் எண்ணிக்கையை விட அதை வாசித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஆனாலும் எந்த மாறுதல்களும் உடனடியாக உருவாகவில்லையே?

மேம்போக்கான எழுத்தை தவமாக நினைத்து எழுதுபவர்கள் எல்லாச் சமயங்களிலும் கொண்டாட்ட மனோநிலையை உருவாக்குபவர்களாக இருக்கின்றார்கள். அதையே கடைசி வரையிலும் கொண்டாடிக் கொண்டிருப்பவர்கள் தாங்கள் வாழ்வதே சரியான வாழ்க்கை என்று கருதிக் கொள்பவர்களாகவும் இருக்கின்றார்கள். அதுவே மொத்த சமூகத்தின் எண்ணமாக மாறும் போது புகையால், குப்பையால் சூழப்பட்ட எண்ணமாக மாறிவிடுகின்றது.

எழுதுவது எப்படி? என்று யோசிப்பவர்களும், தொடர்ந்து எழுதுவது எப்படி? என்று மற்றவர்களிடம் ஆலோசனை கேட்பவர்களும் முதலில் அவர்களின் கடந்த காலத்தைப் பற்றி யோசித்தாலே போதுமானது. வாழ்ந்த வாழ்க்கை, பெற்ற அவமானங்கள், கற்ற பாடங்கள், கடந்து வந்த துயரங்கள் போன்றவற்றை யோசித்தாலே பத்து பொன்னியின் செல்வன்கதை போல நமக்குக் கிடைக்கும்.

ஆனால் நாம் முகமூடி அணிந்து கொண்டு புது அவதாரம் எடுக்கவே விரும்புகின்றோம். புரட்சியாளராக, புதுமை விரும்பியாக நிஜவாழ்க்கையில் சாதிக்க முடியாதவற்றை எழுத்து வழியே அடைய விரும்புகின்றோம். உள்ளே இருக்கும் மனப்பிறழ்வை இறக்கி வைத்து இறுதியில் அவற்றை ரசித்துப் பழகிடவும் மாறிவிடுகின்றோம்.

(ஜுலை 01 2014)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *