18 நீயும் பொம்மை நானும் பொம்மை

ஈமு கோழி விளம்பரங்களுக்கு நடிகர்கள் சிரித்துக் கொண்டே நடித்து நம்பிக்கை கொடுத்தார்கள், நம்பி கையில் வைத்திருந்த காசை கொண்டு போய்க் கொட்டியவர்கள் மட்டும் சிரிக்க முடியாமலும் வெளியே சொல்ல முடியாமலும் நொந்து கொண்டுருக்கிறார்கள்,

ஒவ்வொரு முறையும் இது போன்ற பரபரப்புப் பத்திரிக்கைகளுக்குத் தேவைப்படுகின்றதோ இல்லையோ நமக்கு முக்கியமாகத் தேவைப்டுகின்றது, பத்திரிக்கைகளுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய், தொடங்கும் போது விளம்பரத்திற்கான காசு, முடியும் போது பரபரப்புச் செய்திகள்,

நம்பியவ்ர்களுக்கு?

ஒன்றை மறக்க மற்றொன்று, அதை மறக்க இன்னொன்று என்று மாறி மாறி நமக்கு ஏதோவொன்று சூடாகத் தேவைப்பட்டுக் கொண்டேயிருக்கிறது, தொடக்கத்தில் திண்டபங்களுக்குத் தான் கொறிக்கச் சுவைக்க என்று விளம்பரப்படுத்துவார்கள், இப்போது ஊடகங்களுக்கும் தேவையாய் இருக்கிறது, இது போன்ற செய்திகளை விரும்பத் தொடங்க அதுவே இறுதியில் திணிப்பது போல மாறிவிடுகின்றது,

வாங்கிவிட்டீர்களா? என்று கத்தி நமது செவிப்பறையைக் கிழித்துச் செவிடர்களாய் மாற்றிக் கொண்டுருக்கிறார்கள்,

வலைதளம் முதல் செய்திதாள்கள் வரைக்கும் அத்தனைக்கும் இப்போது லைட் ரீடிங் என்பதே தாரக மந்திரமாக இருக்கிறது, கடினமான விசயத்தைக் கொடுத்தால் பக்கத்தை நகர்த்திச் சென்று விடுவார்கள் என்று நடிகை கிசுகிசுக்களைப் போட்டு நமக்குச் சந்தனம் பூசிக் கொண்டுருக்கிறார்கள். அவளின் காண முடியாத மார்பை கனவுகளில் தேடிக் கொண்டுருக்கின்றோம், நமக்கும் அதுவே தான் தேவையாய் இருக்கிறது, திரை அரங்கத்திற்குள் சென்றால் மூன்று மணி நேரம் கவலைகளை மறக்க என்ற போதை ஊட்டப்படுவதால் படம் எடுப்பவர்கள் என்ன கருத்து கந்தசாமி கணக்காகக் கைக் காசை செலவழிப்பார்கள் என்றா நம்ப முடியும், கலை என்பது பணம் சம்பாரிக்க என்ற பிறகு அங்குக் கலைக்கு வேலையில்லை. சதைக்குத் தான் வேலை.

ஒரு செய்தியை முக்கியத்துவப்படுத்த வேண்டுமானால் நமது பத்திரிக்கைகள் கொடுக்கும் வார்த்தைகளைக் கவனித்துப் பார்த்தாலே நமக்கு நன்றாகப் புரியும், கிரானைட் ஊழல் என்று சொன்னால் அதில் ஒரு கிக் இருக்காது என்பதால் கிரானைட் மாஃபியா என்று ஏதோவொரு நோய்க்கான ஃபோபியா போலவே புனைக்கதைகளைச் சுருட்டி சுருட்டி சூறாவளியாக்கி மக்கள் கவனத்தைத் திசை திருப்பத் தொடங்கி விடுகிறார்கள். நாலைந்து வாரமாக அன்றடாட பத்திரிக்கையில் வந்து கொண்டுருக்கும் பி.ஆர்,பி, நிறுவன அதிபர் பழனிச்சாமி கதையும் திடுக் திடுக் என்று மர்மகதைகளைப் போலத்தான் போய்க் கொண்டுருக்கிறது, இப்போது தான் மக்களுக்கே டாமின் என்றொரு அரசாங்க நிறுவனம் இதற்கென்று இருக்கிறது என்பதே தெரிய வருகின்றது,

தியோனேஸ்வரன் தொட்ங்கி இன்று வரைக்கும் உள்ள அதிகாரிகளின் சொத்து பட்டியலைப் பார்த்தாலே சொர்க்கம் என்பது இந்தக் கனிம வள துறை தான் என்பதைப் புரிந்து கொள்ள முடியும், சில துறைகளின் ஊழல்கள் வெளிப்படையாக மக்களுக்குத் தெரியும், ஆனால் அரசாங்கத்தில் உள்ள பல துறைகளில் நடந்து கொண்டிருக்கும் ஊழல்கள் இன்று வரைக்கும் பலருக்கும் தெரிய வாய்பில்லாமலே கடந்து போய்க் கொண்டுருக்கிறது,

அருண்ஷோரி மத்திய அமைச்சராக இருக்கும் போது அலைக்கற்றை ஊழல் என்பது இத்தனை பிரமாண்டமானதாஇருக்கும் என்பதை எவராவது கற்பனை செய்து பார்த்து இருப்பார்களா? இல்லை தயாநிதி மாறனுக்குத் தான் காமதேனு பசு மேல் நாம் ஏறி உட்கார்ந்து கொண்டுருக்கின்றோம் என்று நம்பியிருப்பாரா? ராசா தான் கறவை மாடு கணக்காக மாற்றப் போகின்றோம் என்று கனவு கண்டுருப்பாரா? அமைச்சராவந்தாலே போதும்? கற்றுக் கொடுப்பவர்கள் சுற்றியிருக்கும் போது களவு என்பது புத்திசாலிதனத்தின் வெளிப்படாக மாறிவிடுகின்றது,

இன்று சூறாவளியாகச் செய்தித் தாள்களில் ஓடிக் கொண்டிருக்கும் கிரானைட் ஊழலைப் பற்றிக் கலைஞருக்குத் தெரியாதா? இல்லை இப்போது நடவடிக்கை எடுத்துக் கொண்டுருக்கும் ஜெ, வுக்குத்தான் தெரியாத விசயமா? கடந்த பத்தாண்டு ஆண்டுகளாக இந்தக் கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழ்ந்து கொண்டுருக்கும் அத்தனை கிராம மக்களும் அரசாங்கத்திற்கு அனுப்பிய மனுக்களும், நினைவூட்டல் கடிதங்களும் அரசாங்க அதிகாரிகளுக்குக் கிடைக்காமல் தபால் துறை ஏதும் சதி செய்து இருக்குமோ? இல்லை கிராம நிர்வாக அதிகாரி முதல் கோட்டையில் இருக்கும் துறை சார்ந்த அத்தனை கோமகன்களுக்கும் இது குறித்த அக்கறை இல்லாமலா போயிருக்கும், ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு விதமான படையல் செய்யும் உலகத்தில் இருக்கும் போது அமைச்சர் முதல் அதிகாரிகள் வரைக்கும் எப்படிக் கவனிக்க வேண்டும் என்று கூடவா பழனிச்சாமிக்குத் தெரியாமலா போயிருக்கும்,

ஒருவர் வளரும் போது குடிசையில் இருந்து கோபுரத்திற்கு உயர்ந்தவர் என்று நான்கு பக்க விளம்பரங்களை வாங்கிக் கொண்டு வாழ்த்தும் அதே பத்திரிக்கைகள் தான் வீழும் போது மாஃபியா உலகத்தில் அவிழும் மர்ம முடிச்சுகள் என்று சிறப்புக்கட்டுரையாக எழுத முடிகின்றது,

உலகமெங்கும் அரசியல் செய்வதற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதொவொரு பலியாடுகள் தேவையாய் இருக்கிறது, அதிலும் இந்தியாவில் இந்தப் பலியாடுகளை நம்பித்தான் அரசியலே நடக்கின்றது,

திருவிழா காலத்தில் அடிக்கப்படும் கோழி, ஆடுக்களைப் போல ஒவ்வொரு சமயத்திலும் இதற்கென்று குறி பார்த்து காத்துக் கொண்டுருப்பவர்கள் அநேகம் பேர்கள். அது அமைச்சராக இருக்கலாம், ஆட்சிக்கு ஜீவநாடியாக உதவிக்கொண்டுருக்கும் அதிகாரியாகக்கூட இருக்கலாம்,

மாவட்ட ஆட்சியர் சகாயத்தை மாற்றியவர்கள் தான் அவர் அனுப்பிய கோப்பின் நகலை படிக்கவே பல மாதங்கள் ஆகியுள்ளது, காரணம் தேவையைப் பொறுத்தே அதிகாரங்கள் பிரயோகிக்கப்படுகின்றது, அவசரங்கள் கருதி அரசியலில் எதுவும் செய்யப்படுவதில்லை, அவசியங்கள் கருதியே இங்கு ஒவ்வொன்று நடைபெறுகின்றது, காரணம் ஜனநாயகத்திற்கு நாம் கொடுக்கும் விலையென்பது இதுவே தான்,

ஊழல் என்றறொரு வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் போன உலகில் மீண்டும் மீண்டும் இதில் ஊழல் அதில் ஊழல் என்று சொல்லும் போது படிப்பவர்களும் துணுக்கு செய்திகளைப் போலப் படித்து விட்டு நகர்ந்து போய் விடுகின்றனர், மறுநாளும் படிக்கும் போது எரிச்சல் தான் உருவாகின்றது, காரணம் படிப்பவர்களும், பார்ப்பவர்களும் நமக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்ற ஏக்கத்தில் இருப்பவர்களாக இருப்பதால் மூச்சடைக்கும் ஊழல் என்பது கூட இன்று எளிதாக மாறிவிட்டது, நல்லொழுக்கம் என்ற வார்த்தை என்பதே நாற்றம் பிடித்த வார்த்தையாகச் சமூகம் பார்க்கத் தொடங்கிய போதே நல்ல விசயங்கள் என்பது நம்மைச்சுற்றி அரிதாகத்தான் நடக்கும், நான்காயிரம் அதிகாரிகள் இருக்கும் இடத்தில் நாலு அதிகாரிகள் செய்யும் செயலால் சிலருக்கும் இன்னமும் தர்ம ுண்ணியத்தின் மேல் நம்பிக்கை வருகின்றது,

நாம் தான் வாழ்வில் பாதி நாட்கள் ஏக்கத்திலும், மீதி நாட்கள் எரிச்சலிலுமாய்க் கழிக்கும் போது இறுதியில் நமக்கு மிஞ்சப்போவது கழிவிரக்கம் மட்டுமே, நுகர்வு கலாச்சாரம் என்பது நுகத்தடி பூட்டப்பட்ட மாடுகள் போல ஒரே நேர்கோட்டில் போய்க் கொண்டுருக்கிறது, நமக்கு எது தேவை என்பதை விட மற்றவர்கள் பார்வையில் நாம் சிறப்பாகத் தெரிய எதுவெல்லாம் தேவை என்பதாகக் கலாச்சாரம் மாறியுள்ளதால் நமக்கே நமக்கான தேவைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை, ஃபேஷன் என்ற வார்த்தையை நாம் நோண்டிப்பார்த்தால் நம் பணத்தின் தேவையை அதிகப்படுத்தும் அசிங்கம் என்பதை யோசிப்பதே இல்லை, அவர்கள் முன்னால் நாம் கௌரவமாகத் தெரிய வேண்டாமா? என்று யோசித்து யோசித்துக் கடைசியில் கடன் என்ற பெயரில் பிச்சை எடுக்கும் அளவுக்குப் போய்க் கடனாளியாக மாறி இங்குப் பாதிப் பேர்களின் வாழ்க்கை தெருவுக்குக் கொண்டு வந்து விடுகின்றது,

தற்போது அதிகாரியாய் இருப்பவன் சம்பளத்திற்கு மேல் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ் ஆசைப்படுபவன், அவனைச் சரிக்கட்ட நினைப்பவன் கருப்புப் பணத்தைக் கட்டிக் கொண்டு தூக்கம் மறந்து தவிப்பவன்,

பணம் என்பது காகிதம் என்பதை மறந்து உலகில் உள்ள அத்தனை கவலைகளையும் போக்கவல்லது என்பதாக நினைத்துக் கொண்டவர்கள் இருக்கும் உலகில் எதை இயல்பாகப் பேசினாலும் இளிச்சவாயன் பட்டமே மிஞ்சும், அளவான பணத்தைப் பெற்றவன் அவனை அவனே ஆள முடியும், அளவுக்கு மிஞ்சிய பணத்தைப் பெற்றவன் பணமே அவனை ஆளத் தொடங்கும், பணம் ஆளத் தொடங்கும் போது தான் மர்மக் கதையில் வரும் திடுக்கிடும் திருப்பங்களும் நம் வாழ்வில் நடக்கத் தொடங்குகின்றது, இருப்பதை வைத்து சிறப்பாக வாழ்வோம் என்று எண்ணிக் கொள்பவர்கள் வாழ்க்கை முழுக்கப் பொம்மையாய் காட்சிகளைக் கண்டு நகர்ந்து விடுவது உத்தமம்,

(27.08.2012)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *