9 நாலும் புரிந்த நாய் வயசு

ஒவ்வொருவருக்கும் இருபது வயதில் இந்த உலகம் அழகாகத் தான் தெரியும். சாதிப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றியே அதிகம் யோசிக்க வைக்கும். வானத்தைக் கூட வில்லாக வளைத்து விட முடியும் என்று நம்ப வைக்கும். மொத்தத்தில் தன்னம்பிக்கை ததும்பி வழியும். ஏறக்குறைய கடலை கரையோராம் நின்று ரசிக்கும் மனப்பாங்கு.

ஆனால் கடலில் இறங்கி உள்ளே நுழைவதற்குள் முப்பது வயது டக்கென்று வந்து விடும். வானம், கடல், அலைகள் என்று ரசிப்பதற்காக இருந்த அத்தனையும் அப்படியே மாறி கணக்குகளின் வழியே ஒவ்வொன்றையும் யோசிக்கத் தோன்றும். நாம் சம்பாரிக்க என்ன வழி? என்ற அலை தான் மனதில் ஓயாமல் அடித்துக் கொண்டிருக்கும். .

அப்போது நம்மிடமிருந்த ரசனைகளை ஒரு அலை இழுத்துச் செல்லும். மிச்சம் மீதியிருந்த ஆர்வத்தை மற்றொரு அலை அலைகழிக்கும். கொஞ்ச கொஞ்சமாக நம்முடைய குழந்தைதனம் மாறியிருப்பதை அப்போது தான் உணரத் தொடங்குவோம். னாலும் இரவு பகலாக ஏதொவொன்றுக்காக மனம் கெஞ்சிக் கொண்டேயிருக்கும்.

அந்த அலை மட்டும் இடைவிடாமல் நம்மைத் தாக்கிக் கொண்டேயிருக்கும். .

இந்தச் சமயத்தில் தான் கணக்கில்லா கணக்கு அலை நம்மை இழுத்துச் செல்லும். அந்த அலை காட்டும் வழியில் நம் பயணம் தொடங்கும். அந்தப் பாலபடங்களே நம்மை வழிநடத்தும். கலையார்வம், கலாரசனை அத்தனையும் அகன்று இனி நம் தலையைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற நிலையில் திருமணம் என்றொரு படகு கிடைக்கின்றது.

மூச்சு வாங்கி, மூச்சடைந்து இனி நாம் மூழ்கி விடுவோமோ என்ற சூழ்நிலையில் இது நமக்கு ஆசுவாசத்தைக் கொடுக்கும். பல சமயம் தள்ளு காற்று இழுத்துக்கொண்டு செல்ல பயணம் சுகமாகவே இருக்கும். எதிர்காற்றில் பயணம் தொடங்கும் போது உள்ளூற இருக்கும் சக்தியின் ரூபமே நமக்குப் புரிபடத் தொடங்கும். படகில் குழந்தைகளும் வந்தமர பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள்என்ற புலம்பல் அலை நமக்கு அறிமுகமாகின்றது.

ரசனையான விசயங்களும், ரசிக்க வேண்டிய தருணங்களும் நம்மை விட்டுச் முழுமையாகச் சென்ற பிறகே கணக்குள் இப்போது துடுப்பாக மாறுகின்றது. வலிகளே வாழ்க்கையாக மாறும்.

நாற்பது வயதை கடந்தவர்களும், கடந்து அதற்கு மேலே வந்தவர்களும் இதனை உணர்ந்தே இருப்பார்கள்.

நாற்பது வயது தொடங்கும் போது மூச்சு முட்டும். பலருக்கும் இந்த வாழ்க்கை போராட்டங்கள் பழகிப் போயிருக்கும். “விதி வலியதுஎன்ற அசரிரீ குரல் வானத்தில் இருந்து ஒலிக்கும். செக்கு மாட்டுத்தனமாக மாறியிருப்போம். ஆனாலும் நாற்பது வயதை கடந்தசாதித்தவர்களும் இங்கே அதிகம்.

சாதனைகள் என்றதும் இது வெறுமனே பணம் சார்ந்ததாக எடுத்துக் கொள்பவர்கள் ஒரு பக்கம். எனக்குப் பிடித்த வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கின்றேன் என்பவர்கள் மறு பக்கம்.

விரும்பியபடி வாழ்கின்றேன் என்பவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்களைப் போன்றவர்களால் இந்த வலையுலகம் இன்னமும் வளர்ந்து கொண்டே இருக்கின்றது. மண்டைச்சூடு நிறைய உள்ளவர்களால் மட்டும் வலையில் ஏதோவொன்றை எழுத முடிகின்றது..

இங்கே ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் வழித்தடங்கள்.

எது சரி? எது தவறு? என்று இன்னமும் எவராலும் அறுதியிட்டு கூறமுடிவதில்லை.

பணத்தையே சுற்றிச் சுற்றி வந்தாலும், மனைவியுடன் கொஞ்சிக் கொஞ்சி வாழ்ந்தாலும், குழந்தைகளை உயிராக நேசித்தாலும் இங்கே ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகளாகத்தான் வாழ வேண்டியுள்ளது.

இதுவே தான் எழுதுவதற்கான காரணங்களையும் உருவாக்கின்றது. வாய்ப்புக் கிடைப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் போது ஆச்சரியமான திறமைகள் வெளியே தெரிய வருகின்றது. தங்கள் ரசனைகளை வாசிப்பதோடு நிறுத்திக் கொள்பவர்கள் சுகவாசியாகவும் மாறிவிடுகின்றனர்..

காரணம் ஒருவர் தன் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்கள் எந்த அளவுக்கு அவரைச் செதுக்கி உருவமாக மாற்றுகின்றதோ அதே அளவுக்குத்தான் அவரின் தனிப்பட்ட சிந்தனைகளும் காலப்போக்கில் மாறிக் கொண்டும் வருகின்றது.

பணத்தேடல்களுக்கு அப்பாற்பட்டு தனது ரசனை உள்ளத்தைக் காப்பாற்றி வைத்திருப்பவர்களிடம் பொறாமை உணர்வு மேலோங்குவதில்லை. உண்டு களித்து உறக்கம் தவிர்த்து ஓயாமல் காட்டு ஓநாய் போலவே உலகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களால் ஒரு நாளும் நிம்மதியாகவும் வாழ முடிவதும் இல்லை.

நாற்பது வயதில் தன் விருப்பங்களை விடத் தான் சார்ந்திருக்கும் குடும்ப உறவுகளுக்குச் சரியானவனாக இல்லாத போது அந்த வாழ்க்கை நரக வாழ்க்கையாமாறிவிடுகின்றது. இதுவே சம்பாரிப்பதே முதல் கடமை என்கிற ரீதியில் நம்மைக் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது.

அதைத்தவிர வேறொன்றை பேசுவதும் நினைப்பதும் வேலையத்த வெட்டி வேலை என்று அடையாளம் காட்டப்படுகின்றது.

இது இந்திய சூழல் மட்டுமல்ல. வளரும் நாடுகளில் போராடித்தான் தங்கள் இடத்தை வைத்துக் கொள்ள முடியும் என்கிற நிலையில் வாழ்பவர்கள் அத்தனை பேர்களுக்கும் வாழ்க்கை என்பது சுற்றியுள்ள ரசனைகளை ரசிப்பதற்கல்ல. பிழைத்திருப்பதற்கு மட்டுமே..

இங்கே கோடுகளை நாம் கிழிப்பதில்லை. மற்றவர்களால் கிழிக்கப்பட்டு நாம் அதற்குள் சிக்கிக் கொள்ள வேண்டியவர்களாக மாறிப் போகின்றோம். இந்தச் சமயத்தில் தான் நம்முடைய அத்தனை விருப்பங்களும் அடிபட்டு அடைய முடியாத கனவுகளை அடை காக்கும் கோழி போல வாழ்கின்றோம். இந்தியாவில் வேலைகேத்தத படிப்பில்லை. படிப்பிற்கேற்ற வேலையும் கிடைப்பதில்லை. இந்த நிலையில் தானபிழைப்புக்காக ஒரு துறையில் நுழைந்து நுகத்தடி பூட்டப்பட்ட மாடு போல மாறி விடுகின்றோம்.

அவரவர் சார்ந்த துறையில் எத்தனை பேர்களுக்கு என்னவிதமான திருப்தி கிடைத்தது? என்பதை யோசிக்கும் போது இறுதியில் ஒவ்வொருவருக்கும் மிஞ்சுவது நாமும் இந்த உலகில் வாழ்ந்துள்ளோம்என்பதே. நம் முன்னால் இருக்கும் ஒவ்வொரு போட்டிகளும் பூதாகரமாக நமக்குத் தெரிய காலப் போக்கில் பந்தயக் குதிரையாக மாறி விடுகின்றோம். நமக்கான விருப்பங்கள் அத்தனையும் பின்னுக்குப் போய் விடுகின்றது. இலக்கில்லா பயணம் போல இந்த வாழ்க்கை ஓடிக் கொண்டே இருக்கின்றது.

எத்தனை பேசினாலும் ஒவ்வொருவரும் பொருள்வாதிகளாகவே வாழ்கின்றோம். அதுவே சரியென்று சமூகம் உணர்த்துவதால் அவ்வாறே வாழ ஆசைப்படுகின்றோம். நம் விருப்பங்கள், மனைவி,, மகள் மகன் என்று தொடங்கி இந்த ஆசைகள் விரிவடைந்து கொண்டே போகின்றது. இன்று பேரன் பேத்திகளுக்கும் சொத்து சேர்க்க வேண்டும் என்று விரிவடைந்து வந்து விட்டதால் பறக்கும் மனிதர்களாகவே மாறிவிடுகின்றோம். ரசிக்க நேரமில்லாமல் ருசிக்க விருப்பமில்லாது இந்த வாழ்க்கையை விரும்பியே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஏக்கத்தைச் சுமந்து ஏக்கத்தோடு வாழ்ந்து ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்என்கிற ரீதியில் இந்த வாழ்க்கை முடிந்தும் போய் விடுகின்றது.

மனிதர்களின் நாற்பது வயதை நாய் வயது என்கிறார்கள். கவ்வியிருப்பது எலும்பென்றும் தெரிந்தும் அதையே தான் தூக்கிக் கொண்டு அலைகின்றோம். கவலைகள் நம்மை அழைத்துச் செல்கின்றது. அதுவே நம்மை உருக்குலைக்கவும் செய்கின்றது.

அறுபது வயதை மற்றொரு குழந்தை பருவத்தின் தொடக்கம் என்கிறார்கள். அறுபது வயதிற்கு மேல் ஒருவர் ஆரோக்கியத்துடன் வாழும் பாக்கியம் அமையப் பெற்றவன் ஆசிர்வதிக்கப்பட்டவன். இயற்கை கொடுத்த வரம் அல்லது இயல்பில் உருவாக்கிக் கொண்ட பழக்கவழக்கம் தந்த பரிசு. மனிதனுக்கு ரசனை எந்த அளவுக்கு முக்கியமோ அதை அனுபவிக்க ஆரோக்கியம் அதை விட முக்கியம். ஆனால் தற்போது கண்களை விற்றே சித்திரம் வாங்கிக் கொண்டிருக்கின்றோம்.

லாபமோ? நட்டமோ? தேவையோ? தேவையில்லையோ நானும் எனது தடங்களைக் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வலைபதிவில் எழுதி வந்துள்ளேன். இதற்கு என்ன தேவை? என்ற நினைப்பு இல்லாமலேயே கற்றதையும் பெற்றதையும் கணக்கில்லாமல் எழுதியுள்ளேன். இந்தப் பயணத்தில் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொருவரும் என்னை நகர்த்தி அழைத்து வந்துள்ளார்கள். சொல்ல முடியாத அன்பை ஏதோவொரு வழியில் எனக்குக் காட்டியிருக்கின்றார்கள்.

பொறுத்தாள்வார் இவன் எழுத்தை படிப்பார்என்று புலம்பியிருக்கின்றார்கள்.என்னை வழி நடத்தி கற்றுத் தந்தும் இருக்கின்றார்கள்.

வலைபதிவுகளில் எழுபவனுக்குத் திரட்டிகள் பாலமாக இருந்தாலும் மகுடம் சூட்டிய பலரும் காலப்போக்கில் காணாமல் போய் விடுகின்றார்கள். நன்றாக எழுதத் தெரிந்தவர்களும் அவரவர் சூழல் காரணமாக எழுதுவதை நிறுத்திவிடவும் செய்கின்றார்கள். ஆனால் இவன் கொஞ்சம் ஒழுங்காக எழுதுகின்றான். படித்துப் பாருங்கள்என்று மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பவர்களும், இவன் எழுத்தை நாம் தொடர்ந்து படிக்க வேண்டும் என்று விரும்பி தனது தளத்தில் இணைத்து வைத்திருப்பவர்கள் மூலமே இங்குப் பலருக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கின்றது.

இங்கு அத்தனை பேர்களுக்கும் ஏதோவொரு திறமை இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் அடையாளம் காணப்படாமல் ஒதுங்கிப் போனவர்கள் தான் அதிகம். அவரவர் உழைப்பை மீறி சில சமயங்கள் இங்கே அதிசயங்கள் நிகழ்வதுண்டு. அதில் நானும் ஒருவனாக இன்று வரையிலும் தாக்குப்பிடித்து நிற்பதற்குக் காரணம் நண்பர்களே.

நான் எழுதத் தொடங்கிய முதல் வாரம் முதல் இன்று வரையிலும் விமர்சனத்தின் வாயிலாகத் தொடர்ந்து என்னைத் தொடரும் ஒரு நட்பு துளசிதளம்.

ஆதரித்த, ஆதரிக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.

மாற்ற முடியாத துயரங்கள், தொடர்ந்து வரும் போதும், ஒவ்வொரு சமயத்திலும் துன்பங்கள் அலைக்கழித்த போதிலும், தூக்கம் வராத இரவுகள் அறிமுகமாகும் போதும், அருகே வந்த இன்பங்கள் நம்மைவிட்டு அகன்ற போதிலும்,ரசனை ள்ளம் கொண்டவர்களால் மட்டுமே ஒவ்வொன்றில் இருந்தும் மீண்டு வர முடிகின்றது.

எழுத்தும் வாசிப்பு கலையும் நம்மை நமக்கே உணர்த்தும்.

பல சமயம் நம் ஆயுளையும் அதிகப்படுத்தும்

(ஜுலை 3 2013)

License

பயத்தோடு வாழப் பழகிக் கொள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *