27 சமச்சீர் கல்வி வரமா சாபமா

 

முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் தொடக்கமே ஒரு விவாத பொருளாக மாறியுள்ளது. தற்போது நீக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி ஒரு விவாத அலையை உருவாக்கியுள்ளது. சென்ற கலைஞர் ஆட்சியில் உச்சநீதி மன்றம் வரைக்கும் சென்று வெற்றிக் கொடி நாட்டிய சமச்சீர் கல்வி அதோகதியாக மாறியுள்ளது. சென்ற வருடம் நீதிமன்றத்தில் தோற்றுப் போய்த் திரும்பிய தனியார் பள்ளிகள் காட்டில் இப்போது சரியான அடைமழை.

அரசியல் காழ்புணர்ச்சியால் தற்போதைய அரசு இந்த நல்ல திட்டமான சமச்சீர் கல்வியை நீக்கியது தவறு என்று சொல்ல வேண்டிய நடுத்தரவர்க்க மக்களின் குரல் ஒன்றும் மேலெழுந்தாகத் தெரியவில்லை. எங்கள் பிள்ளைகளில் மாற்றுச் சான்றிதழ்களை எங்களைக் கேட்காமல் துரித அஞ்சலில் அனுப்பியுள்ளார்கள் என்று சென்னையில் உள்ள ஒரு பள்ளியின் நடவடிக்கை குறித்துப் பெற்றோர்கள் புலம்புகின்றார்களே தவிர அந்தப் பள்ளியை விட்டு வேறு பள்ளியில் கொண்டு போய்ச் சேர்க்கும் எண்ணமில்லை. காரணம் பெற்றோர்களின் மனோபாவம் ஒன்றே ஒன்று தான். என் பிள்ளையின் கல்வியென்பது நாளை வருமானத்திற்கான இன்றைய முதலீடு. இவர்களின் கணக்கைப் போலவே தனியார் பள்ளிக்கூடங்களும் முடிந்தவரைக்கும் மூதலீட்டை வட்டியோடு உடனடியாக எடுத்துக் ொண்டிருக்கிறது.

உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று கொடிநாட்டி வந்த இந்தச் சமச்சீர் கல்வி பிரச்சனை நிச்சயம் இந்த அரசுக்கு முதல் ஆப்பாகத்தான் இருக்கபபோகின்றது. ஆனால் இதனால் முழுமையாகப் பாதிக்கப்படப்போகும் நடுத்தரவர்க்க, கிராமப்புற பெற்றோர்கள் மத்தியில் எந்த அலையும் உருவாகவில்லை. காரணம் என்ன?

கிராமப்புற மாணவன் படிக்கும் கல்வியும் நகர்புறத்தில் படிக்கும் மாணவனும் ஒரே பாடத்திட்டத்தின் படி படிக்கும் போதஇருவருக்குண்டான இடைவெளி இருக்காது என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட இந்தச் சமச்சீர் கல்வியைப்பற்றிப் பேசுவதற்கு முன்பு நம் மக்களின் கல்வி அறிவு குறித்த தற்போதைய மனோபாவத்தைப் பார்த்து விடலாம்.

என் பார்வையில் கடந்த ஓராண்டாகப் பார்த்து வந்த நிகழ்வுகள் இது.

திருப்பூரில் உள்ள 90 சதவிகித முதலாளிமார்களுக்கு அருகே உள்ள குன்னூர், ஊட்டி இதைத்தவிர்த்து ஏற்காடு தான் முக்கியக் கல்விக்கோயிலாக உள்ளது. பல புண்ணிய ஆத்மாக்கள் குழந்தையை மூன்று வயதிலேயே கொண்டு போய்த் தள்ளிவிட்டு வந்து விடுவதுண்டு. காரணம் ஒழுக்கத்தைத் தொடக்கத்தில் இருந்தே கற்று கொடுத்து விடுவார்களாம். ஆய் போனால் கழுவத்தெரியாத குழந்தைகளை அங்குள்ள ஆயாம்மா கைபட்டு விடுதிகளின் கூண்டில் வளர்ந்து கடைசியில் கண்ணியவானாக வளர்ந்து வந்து நிற்பார்களாம்.

இது போல வளர்ந்து நிற்பவர்கள் பெரும்பாலும் அப்பா வளர்த்த நிறுவனத்தை ளர்க்கின்றார்களோ இல்லையோ நடிகைகளுக்கு ப்ளாங் செக் கொடுத்து மாட்டிக் கொள்ளும் அசமந்த மக்குப் பிள்ளையாகவே இருந்து தொலைந்து விடுகிறார்கள். மூன்று தலைமுறைகளுக்குத் தேவையான சொத்துக்களைச் சேர்த்து வைத்திருக்கும் தகப்பன்மார்கள் எப்படியோ இவர்களைச் சகித்துக் கொண்டு பிள்ளைகள் படித்த கல்விக் கோயில்கள் கற்றுக் கொடுக்காத நல்லொழுக்கங்களைத் தங்களைச் சொத்துக்களை இழந்து கற்றுக்கொடுக்கும் அபாக்யவான்களா இருக்கிறார்கள். பிள்ளைகள் கரைத்துக் கொண்டிருக்கும் சொத்துக்களை ஆஞ்சியோகிராம அல்லது பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டு தேமே என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் கண்ணியவான்கள் படித்த கல்விகோயில்கள் வாங்கிய பள்ளிக்கட்டணம் வருடத்திற்கு 1.50 லட்சம் முதல் அதிகபட்சம் 5 லட்சம் வரைக்கும் உள்ளது.

தான் வளர்த்து வைத்துள்ள நிறுவனத்தில் ஒரு சாதாரணப் பட்டதாரியாக வந்து உட்கார வைக்க வேண்டும் என்று நினைக்கும் தகப்பன் மகனின் கல்விக்கென்று செலவழித்த தொகை குறைந்தபட்சம் 20 லட்சம். காரணம் பெரும்பாலான உயர்தர வர்க்க மக்கள் படிக்கும் கல்விக்கூடங்கள் கல்விக்குக் கொடுக்கும் மரியாதை மாணவனின் ஒழுக்கத்திற்குக் கொடுப்பதில்லை. விதிவிலக்குகளைத் தவிர்த்து.

அடுத்து?

சென்ற கல்வியாண்டின் தொடக்கத்தில் அந்த நண்பரை அவரின் அச்சகத்தில் சந்தித்தேன். மிகுந்த மகிழ்ச்சியோடு என் கையைப் பிடித்துப் பலங்கொண்ட வரைக்கும் கைகுலுக்கினார்.

நீங்க சொன்ன நண்பர் பள்ளித் தாளாளரிடமிருந்து போராடி ஒரு சீட்டு வாங்கிக் கொடுத்து விட்டார் என்றார். காரணம் வேறொன்றுமில்லை. காங்கேயம் சாலையில் இருந்த ஒரு பள்ளியில் அவர் குழந்தையை ப்ரிகேஜியில் சேர்த்து விட்ட மகிழ்ச்சி. அந்தப் பள்ளிக்கூடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது. அவர் கட்டிய கட்டணம் அதிகமில்லை. நன்கொடையோடு ஒரு வருட கட்டணம40.000. குழந்தை படிப்பது ப்ரிகேஜி என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

சர்வதேச தரத்தில் இருக்கிறது. என் குழந்தையை அங்கே தான் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்என்று முந்தைய ஆண்டில் இருந்து அந்தப் பள்ளி குறித்த நினைவாகவே இருந்தவர். நீச்சல் குளம் முதல் வகுப்பறை ஏசி வரைக்கு இருக்கிறது என்ற மகிழ்ச்சி வேறு. நண்பர் மிகுந்த வசதி படைத்தவர் அல்ல. நடுத்தரவர்க்கத்திற்குச் சற்று மேம்பட்ட வாழ்க்கை. ஆனால் இப்போதுள்ள திருப்பூர் வாழ்க்கையில் அவர் குழந்தைக்குக் கட்ட வேண்டிய கட்டணத்திற்காக

படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் எண்ணத்தில் எந்த மாற்றமும் இல்லை. வேறு பள்ளியில் சேர்க்கும் எண்ணமுமில்லை. நண்பரின் குழந்தை பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் போது உத்தேசமாகப் பத்து லட்சமாவது செலவு செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

மற்றொருவர்?

அவர் உடன் பணிபுரிந்த நண்பர். இங்குப் பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் இருந்தவர். ஒரு வருடமாய் அடித்த சுனாமியில் பதவியிழந்து, சிறிய நிறுவனங்களில் சேர முடியாமலும், தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாமலும் கடைசியாகச் சிறிய தொழிலை தொடங்கி அதிலும் இழந்து அதோகதியாக இருப்பவரின் ஒரே பையனபடித்த பள்ளிக்கூடமென்பது பணப்பிசாசு கூட்டம். அவர்கள் கேட்கும் கட்டணத்தைக் கட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். சென்ற வருடங்களில் இவருடன் பேசும் போது நீங்க தப்பு பண்ணிட்டீங்க? என் பையனோட பேசிப் பாருங்க. அவன் பேசும் நுனிநாக்கு ஆங்கிலத்தைப் பார்க்கும் போது நான் படுற கஷ்டமெல்லாம் பெரிசா தெரியலை என்றார். இன்று அவர் பையன் நாக்கு இருக்கும் வாய் சாப்பிடுவது ஒரு ரூபாய் அரிசி.

இறுதியாக?

வீட்டுக்கு அருகே பெரிய குடியிருப்பு உண்டு. அங்குள்ளவர்கள் பெரும்பாலும் தொழிலாளவர்க்கத் தோழர்கள். வாரம் முழுக்க வேலையிருந்தால் தான் ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் பாட்டம். இரவு முழுக்க டாஸ்மாக் கொடுக்கும் சந்தோஷம். குழந்தைகளை அருகே இருக்கும் ஆங்கில வழி கல்விகூடத்தில் தான் படிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். இதில் பாதிப்பேர்கள் ஊரை காலி செய்து போய்விட்டார்கள். மீதியிருப்பவர்கள் பணம் கட்முடியாத காரணத்தால் இந்த வருடம் சற்றுத் தொலைவில் உள்ள அரசாங்கப்பள்ளியில் சேர்த்து விட்டுள்ளார்கள்.

சம்ச்சீர் கல்விக்கும் மேலே உள்ள சம்பவங்களுக்கும் ஏதாவது தொடர்புள்ளதா?

மாறிவரும் சமூகச் சிந்தனையில் இப்போது கல்வி என்பது அறிவுக்குரிய விசயம் அல்ல. அது குடும்பக் கௌரவத்திற்குரிய விசயமாகவே மாறியுள்ளது. என் குழந்தை எப்படிப் படிக்கிறான்? என்பதை விட எந்தப் பள்ளியில் படிக்கிறான் என்பது தான் இப்போது பெற்றோர்களிடம் இருக்கும் முக்கியப் பேசு பொருளாக உள்ளது. முந்தைய அரசு உருவாக்கிய சமச்சீர் கல்வியென்பது பெரும்பாலான பெற்றோர்களிடம் ஒரு விதமான எதிர்மறை சிந்தனைகளைத்தான் உருவாக்கியது. பெரும்பாலான பெற்றோர்கள் அரசாங்கம் கல்விக் கொள்கையில் தலையிடக்கூடாது என்கிறார்கள். அதிலும் சமீப காலமாகப் புற்றீசல் போலவே முளைத்து, கல்வியை வியாபாரக்கும் கொழுந்துகள் கொடுக்கும் உத்திரவாதமென்பது ப்போது வேறு விதமாக உள்ளது.

எங்கள் பள்ளியில் அரசாங்க பாடத்திட்டம் அல்ல. சர்வதேச தரத்திற்கு இணையாகப் போட்டி போடக்கூடிய வகையில் உள்ள பாடத்திட்டம் என்பதாகப் பெற்றோர்களை மூளைச்சலவை செய்து மொத்த முட்டாளாக மாற்றி இருக்கும் போது அரசாங்கம் உருவாக்கிய சமச்சீர் கல்வி என்ன தாக்கத்தை உருவாக்க முடியும்? இப்போது காசு வாங்கிக் கொண்டும் கமுக்கமாகக் குத்தி தள்ளிய மக்கள் விபரமாகவும் பேசத் தொடங்கி விட்டனர். சமச்சீர் கல்வி கொண்டு வந்த கலைஞர் குழந்தைகள் எங்கே படித்தார்கள். ஸ்டாலின் மகள் செந்தாமரை நடத்திக் கொண்டிருக்கும் பள்ளிக்கூடம் (பள்ளிக்கூடத்தின் பெயர் சன் ஷைன் என்னவொரு தமிழ்பற்று?) எந்தப் பாடத்திட்டத்தின் படி நடத்துகிறார்கள் என்று வக்கணையாகக் கேள்வி வேறு கேட்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் இப்போது தங்கள் குழந்தைகள் குறித்து அவரவர் மனதில் உள்ளது ஒன்றே ஒன்று தான்.

என் ுழந்தை நன்றாக ஆங்கிலம் பேச வேண்டும்.

இந்த ஆங்கில மோகமென்பது ஒவ்வொருவரையும் ஆட்டிப்படைக்கத் தனியார் கல்விக்கூடங்களும் முடிந்தவரைக்கும் லாபம் என்பதாகக் கல்லாகட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். இப்போது மெட்ரிக் சிலபஸ் என்பதிலிருந்து சிபிஎஸ்சி வரைக்கும் வந்து நின்று அடுத்தக் கட்டண கொள்ளையை வேறு தொடங்கியிருக்கிறார்கள். இதில் ஒரு மகத்தான் ஆச்சரியம் என்னவென்றால் பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் போது கட் ஆஃப் மதிப்பெண்கள் என்பது எல்லாவற்றுக்கும் ஒன்றே தான். இந்தப் பாடத்திட்டத்திற்கு இத்தனை என்று எங்குமில்லை?

ஆனால் இதற்காக மொத்தமாகத் தனியார் கல்விகூடங்களை மட்டும் குறை சொல்ல முடியாது.

தற்போது மாநில அளவில் முதன்மை இடங்களில் வந்து கொண்டிருக்கும் மாணவர்களும், நூறு சதவிகிதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளில் சமீப காலமாக அரசாங்க பள்ளிக்கூடங்களும் அதிக அளவில் இருக்கத் தான் செய்கின்றது. ஆனால் மாநில அரசாங்கம் கல்வி குறித்து உண்மையான அக்கறை கொள்ளாத பட்சத்தில் தான் பிரச்சனை உருவாக ஆரம்பிக்கின்றது.

தனியார் கல்விக்கூடங்கள் செய்வதோடு அதற்குண்டான கட்டணங்களையும் இரண்டு மடங்காக வசூலிக்கும் போது தான் பிரச்சனையின் தொடக்கமே உருவாகின்றது. அரசாங்கத்தின் கேவலமான நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பெற்றோர்களை இந்தப் பாழுங்கிணற்றில் மறைமுகமாகக் கொண்டு போய்ச் சேர்த்துக் கொண்டிருக்கிறது.

சென்ற ஆட்சியில் செம்மொழி மாநாடு என்று அதிகாரபூர்வமாக 380 கோடிகளைக் கொண்டு போய்க் கொட்டினார்கள். இப்போது சமச்சீர் கல்வியை மாற்றுவதால் 200 கோடி நட்டம் என்று தொடர்ந்து காட்டுக் கத்தலாய் ஊடகத்தில் கத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் செம்மொழி மாநாட்டினால் யாருக்கு என்ன லாபம் வந்தது? மாநாடு முடிந்த அடுத்த நாள் முதல் ஒரு தமிழ்ப்புரட்சி நடந்து மக்கள் என் மொழி என் இனம் என்று பேசியிருப்பார்களோ?

செம்மொழி மாநாடு குறித்து, தன்னைப் பற்றி அவசரமாய்ப் பாடப் புத்தகத்தில் கொண்டு வந்த பதவியை இழந்த கலைஞர் அரசின் கல்வித் துறையின் சாதனைகளைச் சிலவற்றைப் பார்த்துவிடலாம்.

இப்போதும் தமிழகத்தில் சுமார் 1500 அரசாங்கப் பள்ளிகள் ஓராசிரியரைக் கொண்டே செயல்படுகின்றது. இதில் கொடுமை என்னவென்றால் தமிழ்நாட்டில் 80 சதவிகித மாணவர்கள் அரசு பள்ளிக்கூடங்களை நம்பியே படித்து வருகின்றனர். தொடக்கக்கல்வி முதல் நடுநிலைக்கல்வி வரைக்குமான வகுப்புகளுக்குரிய 60 000 ஆசிரிய பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளது. இது போலவே உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் சுமார் 10 000 காலியிடங்கள் உள்ளது. இதையெல்லாம் விட மற்றொரு கொடுமையும் உண்டு. ஏறக்குறைய 17 000 ஆசிரியர்களின் முக்கியப் பணியென்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் அடையாள அட்டை விநியோகம், பஞ்சாயத்து யூனியன் வேலைகள் என்று வருட்ந்தோறும் வேறு வேலை செய்ய வேண்டும்.

கர்மவீரர் காமராஜர் காலத்தில் மாணவர்கள் ஆசிரியர்களின் சதவிகிதமென்பது இருபது மாணவர்களுக்கு ஒரு ஆசிரியராக இருந்தது. இதுவே கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி தற்போது 49 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற ரீதியில் வந்துள்ளது. பள்ளிக்கூடங்களில் தான் இந்தக் குளறுபடியென்றால் கல்லூரியிலும் இதே நிலைமைதான்.

தமிழகத்தில் 62 கலைக்கல்லூரிகள் உள்ளது. இதில் ஷிப்டு முறையில் செயல்படும் சுயநிதிக்கல்லூரிகளும் உள்ளது. இவை அனைத்திலும் நிரப்பப்படாமல் இருக்கும் காலியிடங்களின் எண்ணிக்கை 3000. பேராசிரியர்கள் இல்லாமலேயே நமது மாணாக்கர்கள் அப்துல் கலாம் சொன்ன கனவு காணுங்கள் என்ற பாடத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மட்டும் 500 ஆகும்.

ஏன் தனியாரைத் தேடி பெற்றோர்கள் செல்கிறார்கள் என்பதை இந்தக் கணக்குகள் நமக்கு உணர்த்தும். கல்விப்பானையே ஓட்டையாக இருக்கும் போது அதில் உள்ள தண்ணீர் குறித்து யாருக்கு அக்கறை?

முடிந்தவரைக்கும் கல்விக்கட்டணம் என்கிற ரீதியில் தனியார் பள்ளிகள் சுருட்ட, நாங்கள் உழைத்து சுடுகாடு போனாலும் போவோமே தவிர எங்க பிள்ளைங்க இங்கீலிஷ் படித்தே ஆகனும் என்கிற ரீதியில் இருக்கும் பெற்றோர்கள் இருக்கும் வரைக்கும் சமச்சீர் கல்வி என்பது சமாதிக்குரிய சங்கதிதான். எந்த அரசாங்கமும் இப்போதுள்ள தனியார் கல்விக்கூடங்களை அடக்கத் தேவையில்லை. அவர்களின் கட்டணக் கொள்ளையைக் குறித்துக் கவலைப்பட ேண்டியதில்லை. இந்தச் சமச்சீர் கல்வியை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்பது குறித்தும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

தெரிந்தே சவக்குழியில் போய் விழுபவர்களைக் காப்பாற்றுவதை விட வேறு சிலவற்றைத் தற்போதைய அரசாங்கம் உடனடியாகச் செய்தாலே போதுமானது. ப்போது சமச்சீர் கல்வியை விட வேறு சில முக்கியக் கடமைகள் தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கிறது. இப்போதுள்ள அரசாங்கப் பள்ளிக்கூடங்களைத் தெளிவான முறையில், சரியான ஆசிரியர்கள் கொண்டு, முறையான வசதிகள் செய்து கொடுத்தாலே போதுமானது. இப்போதும் கூடப் பல பெற்றோர்களும் அரசாங்கப் பள்ளியில் இடம் கிடைக்காதா? என்கிற ரீதியில் தான் அலைந்து கொண்டிருக்கிறார்க்ள். முறையான கட்டிட வசதிகள் இல்லாமல் ஆட்டு மந்தைகளைப் போல மாணவர்களை அடைத்து எத்தனை நாளைக்குத் தான் அரசாங்க பள்ளிக்கூடங்கள் மாணவர்களின் அறிவுக்கண் திறக்கும் பணியில் ஈடுபட முடியும்?.

காரணம் பெரும்பான்மையான பெற்றோர்களுக்கு நன்றாகவே தெரியும். பிள்ளைகள் சரியான முறையில் படிக்காத வரைக்கும் அது அம்பானி பள்ளியில் சேர்த்தாலும் தறுதலையாகத்தான் வெளியே வரும்.

(27.05.2011)

License

பயத்தோடு வாழப் பழகிக் கொள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *