29 கூடங்குளம் — உண்மைக்கும் பொய்க்கும் நடுவில்

எதிர்க்காதே என்று தொடங்கினார்கள். ஆனால் இப்போது தொடக்கத்திலேயே சொல்லியிருந்தால் இந்த அளவுக்குப் பிரச்சனை வந்துருக்காதே என்கிறார்கள்.

இறுதியாக அணு உலை மூலம் மின்சாரம் அவசியம் தேவை. தமிழ்நாடு மின்வெட்டில் தத்தளித்துக் கொண்டுருக்கிறது என்று அறிவுரையை வழங்கி முடிக்கின்றார்கள். கூடவே 14,000 கோடி முதலீடு வீணாகப் போய்விடக்கூடாது. எதிரே வந்து நிற்காதே என்கிறார்கள்.

அணு உலைக்கு மக்களின் எதிர்ப்புகள் நாளுக்கு நாள் அதிகமாக 500 கோடி செலவில் ஊரை உல்லாசபுரியாக மாற்றுவோம் என்று சப்பைக்கட்டிகள் சர்க்கரையில் தேன் தடவி நாக்கில் வைக்கிறார்கள். தொடக்கம் முதல் எதிர்த்த அத்தனை நிகழ்வுகளும் பத்திரிக்கைகளுக்குத் துணுக்குச் செய்திகளாகவே போய்விட இன்றைய இடிந்தகரை மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைக் கவர் ஸ்டோரியாக எழுத முடிகின்றது. அணு உலை பூதத்தை அமைதியாக வேலை வாங்கி விடுவோம் என்று அரசு அளிக்கும் நம்பிக்கைகளை இடிந்தகரை குழந்தைகள் கூட நம்பத் தயாராக இல்லை.

அரசு நிர்வாக லட்சணத்தைப் புரிந்து கொண்டே விடாப்பிடியாகப் போராட்டக்காரர்கள் இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். ஒரு வருடத்தினைக் கடந்தும் போராட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

கடைசியாகப் போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரை தேசத் துரோகி என்ற வார்த்தையில் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள்.

நீங்கள் அணு உலையை ஆதரிக்காவிட்டால் தேசத் துரோகிகளின் பக்கம் இருப்பதாக அர்த்தம். கட்சிகளில் மட்டும் எழுத்துக்களை மாற்றி வைத்திருக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போலவே ஒவ்வொரு ஊடகமும் இறுதியாக இப்படித்தான் முடிக்கின்றார்கள்.

400 நாட்களைத் தொடப்போகும் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களின் போராட்டத்திற்கு தேசிய அளவில் பெரிதான ஆதரவில்லை. இந்தியா என்பது ஒரே நாடு என்பதில் இருந்து மாறி வெகு நாளாகி விட்டது. அரசியல்வாதிகளின் ஒற்றுமை என்பது ஊழல்களில் சிக்கியவர்களைப் பரஸ்பரம் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே இருக்கிறது. மற்றபடி அரசியல் கண்க்குகளின் அடிப்படையில் அந்தந்த மாநில பிரச்சனைகள் அவரவர் பக்கம் என்பதாகத்தான் தற்போதைய இந்தியா ஒளிர்கின்றது. போபால் விஷவாயு சம்பவம் இந்தியா முழுக்க எதிரொலித்து இருந்தால் இன்று இந்தியாவில் எந்த விஷவாயு ஆலைகளும் செயல்பட்டுக் கொண்டுருக்க முடியாதே?

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட பகுதியின் வாழ்வாதாரம் என்பதோடு பல தலைமுறைகள் சார்ந்த பிரச்சனை என்பதைக் கூட எவரும் யோசிக்கத் தயாராய் இல்லை. தற்போது தமிழ்நாட்டில் நிலவிக் கொண்டுருக்கும் மின்வெட்டு தான் முக்கியப் பிரச்சனை. மின்வெட்டிலிருந்து காக்க வந்த ரட்சகராக இந்த அணு உலை பார்க்கப்படுவதால் ஒரு மாநிலத்திற்காக ஒரு ஊரை காவு கொடுக்கலாம் என்ற தத்துவம் தூசி தட்டப்பட்டுப் பலரின் கண்களை மறைந்து இருக்கிறது.

இப்போதுள்ள சூழ்நிலையில் மின்வெட்டில் இருந்து தப்பிக்க இதைத்தவிர வேறென்ன வழி? காரணம் மாற்று வழியைச் சிந்திக்கத் தெரியாதவர்களைத் தலைவர்களாகப் பெற்ற நாம் காலம் முழுக்க மக்கு மக்களாகத் தான் தான் இருக்க முடியும். இதன் காரணமாகவே மக்கி போக முடியாத, பாதுகாக்க முடியாத அணுஉலை கழிவுகளைப் பற்றி அடித்தட்டு மக்கள் புரிந்து கொள்ளத் தயாராய் இல்லை. இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு இந்த அணுமின்சாரம் அவசியம் தேவை என்பவர்களிடம் கேட்டுப் பார்க்கலாம்.

தற்போதைய இந்திய மின்சாரத் தேவையை 71 சதவிகிதம் அனல் மின்சாரம் மூலமும், 21 சதவிகிதம் புனல் மின்சாரம் மூலமும் நிறைவேற்றப்படுகின்றது. மரபு சார்ந்த நிலையில் தான் இன்றைபெரும்பாலான மின்சாரத் தேவை பூர்த்திச் செய்யப்படுகின்றது. இன்று ஐரோப்பிய நாடுகள் அணைத்தும் சூரிய ஒளியை பயன்படுத்தி முடிந்தவரைக்கும் தங்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் போது இந்தியா மட்டும் ஏன் இந்த அளவுக்கு இந்த அணுமின்சாரத்தில் ஆர்வமாக இருக்கிறது.

அணு உலையை வாங்கும் இடம் முதல் அதைப் பொருத்தும் இடம் வரைக்கும் ஊழல் கூட்டணி மக்களின் சாம்ராஜ்யமாக இருப்பதால் இந்தச் சர்வதேச லாபிக்கு முன்னால் சாதாரண மக்களின் குரல்கள் எடுபடுவதில்லை. இதற்கு மேலும் பல அணுகுண்டு ரகசியங்களும் இதற்குள் உண்டு. அது தேச பாதுகாப்பு என்பதிற்குள் கொண்டு போய் நிறுத்தி கேள்வியே கேட்க முடியாமல் மாற்றி விடுவார்கள்.

மற்ற மாநிலங்களைத் தமிழ்நாட்டில் காற்றாலை மின்சார உற்பத்தி அதிகம். மேம்படுத்த வாய்ப்புகளும் அதிகம். ஆனால் காற்றாலை மின்சாரத்தை ஆதரிக்கத் தெரியாத அரசு தனது பயம் காட்டும் நடவடிக்கைகள் மூலம் மட்டுமே இது போன்ற அணுஉலையைச் செயல்படுத்த விரும்புகின்றது.

கூடங்குளம் அணுஉலையைத் திறக்கக்கூடாது என்று சொல்பவர்களை நோக்கி வீசப்படும் கேள்விகளைப் போல ஆதரவுக்கும் எதிர்ப்புக்கும் இடையே இருக்கும் கேள்விகள் அர்த்தமற்றுச் சிரிக்கின்றது.

1948 ஆம் ஆண்டு இந்திய அணுசக்தி ஆணையம் தொடங்கப்பட்டது. இந்த அணுசக்தி துறை தன்னாட்சி பெற்றது. நேரிடையாகப் பிரதமர் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்பாகும். நீதிமன்றங்கள் கேட்கும் கேள்விகள் கூடப் பல சமயம் நாட்டின் பாதுகாப்பு என்ற போர்வையில் மறைக்கப்படும். ஒரு வல்லரசு நாடு உலகத்திடம் சொல்ல சில தகுதிகள் உண்டு. மக்களுக்கான நல்லரசு என்பதை விட வல்லரசு நாட்டில் பாதுகாப்புக்காக அணுகுண்டுகள் இருக்கிறதா என்பதை வைத்து தான் அந்த வல்லரசு பேட்டைக்குள் நுழைய முடியும்.

இந்த அணுக்களைப் பிளந்து தான் இங்கே மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது. அணு உலையில் யுரேனிய அணுக்களைப் பிளக்கப்படும் 3500 முதல் 4000 டிகிரி செல்சியஸ் வரைக்கும் சக்தியாக மாறி அணுகுண்டாக வெடிக்கின்றது. இந்த அணுப் பிளப்பின் போது நியூட்ரான்களை நுழைவித்து வெப்பசக்தியை கட்டுப்படுத்தப்படுகின்றது. இந்த வெப்பசக்தி மூலம் உருவாகும் நீராவி மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகின்றது.

2032 ஆம் ஆண்டுக்குள் இந்திய அரசாங்கம் அணுஉலைகள் மூலம் 63,000 மெகாவாட் மின்சாரம் எடுக்கத் திட்டம் தீட்டியுள்ளது. 1987 ஆம் ஆண்டுக்குள் 25,000 மெகாவாட, 2000 ஆம் ஆண்டுக்குள் 45,000 மெகாவாட் என்று திட்டம் தீட்டி பல்லாயிரக்கணக்காகோடிகளை விழுங்கி விட்டு இன்று வரையிலும் சாதித்த சாதனை 3310 மெகாவாட் மட்டுமே. இந்தக் கணக்கெல்லாம் அமைச்சர் நாராயணசாமிக்கு தெரியுமோ? தெரியாதோ? இந்தத் துறையில் முதலீடாகப் போடப்படும் தொகையை மரபுசார்ந்த மின்சாரத் தேவையில் போட்டுருந்தால் இந்நேரம் இந்தியா மின்சார உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து மற்ற நாடுகளுக்கு மிச்சத்தை விற்று லாபம் பார்த்திருக்க முடியும்.

இன்று ஊழல்களின் தொகை மில்லியனைத் தாண்டி பில்லியன்களிடம் வந்து விட்டதால் மரபு தன்மைகளை விட்டு வெளியே வந்து விட்டார்கள் நம் தலைவர்கள்.

கூடங்குளம் அணுஉலை என்பதஇப்போதைக்கு தேசிய சொத்து. தமிழ்நாட்டில் இருந்தாலும் மாநில அரசாங்கத்திற்கு ஓர் அளவுக்கு மேல் எந்தச் செயலையும் செய்துவிட முடியாது. காரணம் நெய்வேலி திட்டம் தொடங்கும் போதும் இப்படித்தான் பலவிதமான உறுதிகள் அங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இன்று நெய்வேலியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் மூன்றில் ஒரு பங்கு தான் தமிழகத்திற்கு வழங்கப்படுகின்றது. நெய்வேலியில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை வெளிசந்தையில் விற்க தமிழ்நாடு ஒரு அடித்தளம். அவ்வளவுதான்.

அதற்குள் இந்த அணு உலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தில் ஆயிரம் மெகாவாட் தமிழ்நாட்டுக்கு என்று கட்டியம் கூறி மக்களை நம்பவைத்துக் கொண்டுருக்கிறார்கள். ஒரு வேளை இந்த அணுஉலை செயல்படும் பட்சத்தில், ஒழுங்காகச் செயல்படும் பட்சத்தில் முழுமையான உற்பத்தி திறன் வரவே குறைந்தது இரண்டு வருடமாகும். அதற்குள் தமிழ்நாட்டின் மின்வெட்டும் இன்னும் பல மடங்கு அதிகமாக எகிறிவிடும்.

தமிழ்நாட்டின் தற்போதைய பற்றாக்குறை 3000 மெகாவாட். கூடங்குளத்தில் செயல்படுத்த நினைக்கும் ஆறு உலையும் முழுமையாக ஓடினால் கூடப் பூர்த்திச் செய்துவிட முடியாது. அப்போதைக்கு இங்குள்ளவர்கள் வாட் என்று மத்திய அரசாங்கத்தைக் கேட்டு விட முடியாது. காரணம் நாம் அணைவரும் இந்தியர்கள். வேற்றுமையில் ஒற்றுமையாய் வாழ்பவர்கள். பகிர்ந்துண்டு பல்யுர் ஓம்புதல் போன்ற வார்த்தைகள் பதிலாக வரும்.

அணுஉலை பிரச்சனை தொடங்கியதிலிருந்தே தேசபக்தி காற்றில் பறந்து வந்து தாக்குகின்றது. ஊடகங்கள் அறிவுரையைக் கட்டுரையாக எழுதி களைத்துப் போயிருக்கிறார்கள். அச்சமற்று இருக்க அத்தனை ஏற்பாடுகளையும் செய்து விட்டோம் என்கிறார்கள். பாதி அளவுக்குக் கூட முடியாத போது ஏனிந்த அவசரம் என்றால் அறிஞர்கள் சொல்லி விட்டார்கள். அமைதியாய் இரு என்கிறார்கள். இத்தனை கோடிகளைககொண்டு வந்து கொட்டிவிட்டு நிறுத்தினால் தகுமா? என்கிறார்கள். அணுஉலை ஓடாத நாட்களைச் சுட்டிக்காட்டி நட்டக்கணக்கில் நம்மை யோசிக்க வைக்கிறார்கள். இறுதியாக உச்ச நீதிமன்றமே உத்தரவு கொடுத்தாகி விட்டது. இதற்கு மேலும் தாமதப்படுத்தலாமா என்கிறார்களா.

அணு உலை செயல்பாட்டின் மூலம் உருவாகும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை விட மற்றொரு பெரிய பிரச்சனை அணுஉலை கழிவுகள்.

புளூடோனியம் 239 தனது கதிர்வீச்சு தன்மையைப் பாதியாகக் குறைத்துக் கொள்ள எடுத்துக் கொள்ளும் காலஅளவு சுமாராக 24,000 வருடங்கள். அயோடின் 129 தனது கதிர்வீச்சை பாதியாகக் குறைத்துக் கொள்ளும் கால அளவு 17 மில்லியன் வருடங்கள். ஒரு அணுமின் நிலையம் வருடம் முழுக்க ஓடினால் 20 மெட்ரிக் டன் அணுக்கழிவுகளை உருவாக்கும். இவற்றிக்கு மாற்று ஏற்பாடு இதுவரையிலும் கண்டுபிடிக்க வில்லை என்பதால் பாதுகாத்து தான் ஆக வேண்டும். இங்கே தான் பிரச்சனையே ஆரம்பம் ஆகின்றது.

மற்றொன்றையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு அணுஉலை அதிகபட்சமாக 45 வருடங்கள் தான் செயல்படுத்த முடியும். அதற்குப்பிறகு மூடி வைத்துவிட வேண்டும். மிகப் பெரிய அளவில் காங்கீரிட் தொட்டி கட்டி அதைப் பூமிக்கடியில் புதைத்து வைத்து விட வேண்டும். பூதம் போல் காவல் காக்க வேண்டும். கரணம் தப்பினால் மரணம். இதற்குப் பிறகு குறிப்பிட்ட பகுதியை மனிதர்கள் வாழ முடியாத பகுதியாக மாற்றப்பட்டு விடும்.

ஒவ்வொரு 45 வருடங்களுக்கு ஒரு முறை அணுஉலையை மாற்று இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். கிடைக்கப் போகும் 300 மெகாவாட் மின்சாரத்திற்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தலைமுறைகளைப் பழி கொடுத்து நாம் சுகவாசியாக வாழ நினைக்கின்றோம்.

இறுதியாக இந்திய இறையாண்மையைக் கொண்டு வந்து அணைவரையும் ஒரு வட்டத்திற்குள் நிறுத்தி வேடிக்கை காட்டுகிறார்கள். ஆனால் வன்முறையின்றி எந்தவித அசம்பாவிதமும் இன்றி, வருடங்களைத்தாண்டி நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தை ஊழல்வாதிகள் கண்டு கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது போராட்டக்காரர்களின் தவறே? பொசுக்கென்று கோபப்படும் மீனவ சமுதாயத்தை ஒன்றினைத்து சாத்வீக போராட்டத்தை முன்னெடுத்த உதயகுமார் இவர்களின் பார்வையில் காசு வாங்கிக் கொண்டு கள்ளத்தனம் செய்கின்றவர் தான்.

இதற்கு மேலும் உதயகுமாருக்கு பல பட்டங்கள். ஓடிவிட்டார். தப்பிவிட்டார். மதத்திற்குப் பின்னால் நின்று கொண்டு பயங்காட்டுகிறார் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விமர்சனங்கள். பிரியாணி கொடுத்துக் கூட்டம் கூட்டி பழக்கப்படுத்தியவர்களிடம் வேறெந்த விமர்சனத்தை எதிர்பார்க்க முடியும்.

வசதிகளற்று வாழும் ஒரு சமூக மக்களின் அவலங்களைக் கிண்டலாகச் சித்தரிக்கின்றார்கள். அவர்களின் அச்சத்துடன் கேட்கப்படும் கேள்விகளுக்கு அது தேவையற்ற பயம் என்பதற்குள் முடித்து விடுகிறார்கள். கேள்விகள் தொடர்ந்து எழ, இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானவன் என்பதில் தொடங்கி மிரட்டுகிறார்கள்.

அகிம்சை போராட்டம் இன்று ஹிம்சையின் பக்கம் மெதுவாகத் திரும்பத் தொடங்கியுள்ளது. மகாதமா காந்தியின் அகிம்சை போராட்டத்தை இன்று வரையிலும் சிலாகித்துப் பேசுபவர்கள் உதயகுமார் நடத்திக் கொண்டுருக்கும் அகிம்சை போராட்டத்தினை ஆதரிக்கத் தயாராக இல்லை. காரணம் காந்தி எதிர்கொண்டது வெள்ளையர்களை. உதயகுமார் எதிர்கொள்வதே கொள்ளையர்களை.

இதுவே தமிழ்நாட்டு மீனவ சமுதாயம் ஒன்று சேர்ந்து தமிழ்நாடு முழுக்க இந்தப் பிரச்சனை பரவும் போது வாழ்வாதாரப் பிரச்சனை மதப்பிரச்சனையாக மாறிவிடும் அபாயமுண்டு. மதக்கலவரமாக மாற்றிவிடத்தான் மாதா கோவிலை மாசுபடுத்தியவர்கள் விரும்புகிறார்கள் போலும்.

(17.09.2012)

License

பயத்தோடு வாழப் பழகிக் கொள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *