15 காதோடு பேசலாம் வாங்க

போராடுவோம்போராடுவோம். இறுதி வரை போராடுவோம்.” தெருமுனைகளில், அடுத்தச் சந்தில், அரசு அலுவக வாசலில் என்று இந்த வார்த்தைகளை ஏதோவொரு இடத்தில் கேட்டு நகர்ந்து வந்து இருப்போம்.

இன்று வரைக்கும் போராட்டத்தின் வீச்சு குறையவில்லை. ஆனால் வடிவங்கள் தான் மாறியுள்ளது. போராட அழைப்பவர்களின் நோக்கமும் மாறியுள்ளது.

ாலையில் போக்குவரத்து கூட்ட நெரிசலில் நாம் முந்திக் கொண்டு செல்ல முயற்சிக்கும் போது பக்கவாட்டில் கூட்டமாக நின்று கொண்டு சப்தம் போட்டு உரக்க தங்கள் கோரிக்கைகளைக் கத்திக் கொண்டு இருப்பவர்களைக் கவனித்துருக்கிறீர்களா?

நடந்து சென்று கொண்டுருக்கும் உங்கள் கையில் எவரோ கொண்டு வந்து திணிக்கும் கோரிக்கைகள் அடங்கிய அந்தத் தாளை வாசித்துப் பார்த்து இருக்கிறீர்களா? கூட்டத்திற்குள் புகுந்து வெளியே வந்து உண்டியல் ஏந்தி வந்தவர்கள் உங்கள் முகத்திற்கு முன்னால் ஜில்ஜில் என்று குலுக்கி உங்கள் முகத்தை ஏறிட்டுப் பார்க்கும் போது ங்கள் மனதில் என்ன தோன்றியிருக்கும்? அவர்களை நிதானமாக ஏறிட்டு பார்த்து இருக்கிறீர்களா?

இவனுகளுக்கு வேற பொழப்பே இல்லப்பா. ஊன்னா தெருவுக்கு வந்து நம்மள வதைக்கிறானுங்கப்பா….”

அலுத்துக் கொண்டே எரிச்சலை துப்புவோம்.

குடிதண்ணீர் இருபது நாளாக வரவில்லை. எங்களுக்கு ஒரு நியாயம் வேண்டும் என்று கேட்ட கோரிக்கைகள் தீர்வு வராமல் போகத் தெருவுக்குப் பெண்கள் பானையுடன் வந்து நிற்கும் போது அரசு நிர்வாகம் வேகமாகச் செயலில் இறங்கும். சாலை போக்குவரத்து பாதிக்க, போராடிக் கொண்டுருக்கும் அந்தப் பெண்கள் கூட்டத்தை அவசரமாய்ப் பயணிக்கும் பெண்கள் திட்டுவதைப் பார்க்கின்றோம்.

எந்தப் பிரசச்னையும் நம்மைத் தாக்காத வரைக்கும் அது பிரச்சனை அல்ல. அடுத்தச் சந்தில் தீப்பிடித்து எரிந்தால் அது அடுத்த நாள் செய்தி தாளில் வரப்போகின்ற செய்தி. நம் வீட்டில் நடந்தால் அதுவொரு கண்ணீர் காவியம்.

போராட்த்தின் வடிவம் இன்று இணையம் வரைக்கும் பலவிதங்களிலும் மாறியுள்ளது. தெருவுக்கு வந்து போராடுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. அவரவர் சார்ந்த வாழ்க்கைப் போராட்டத்திற்கே இங்கே நேரம் இருப்பதில்லை. பொது நலம் என்பது இன்று அரசியல் கட்சிகளால் உச்சரிக்கப்படும் வார்த்தை மட்டுமே. அதுவே செயலாக்கம் பெறும் போது சுயநலமாகத்தான் போய்விடுகின்றது. இன்றைய சமூகத்தின் போராட்டங்கள் என்பது செய்திதாள்களுக்குத் தேவைப்படும் அன்றாடச் செய்திகளில் ஒன்று. அதற்குப் பின்னால் உள்ள அவலத்தையும், அதில் பங்கெடுத்தவர்களின் அவஸ்த்தைகளும் நமக்கு முக்கியமல்ல.

காரணம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நமக்கு எதற்கும் நேரம் இருப்பதில்லை. கடந்து சென்றுவிடவே விரும்புகின்றோம்.

ஒவ்வொரு நாளும் யாரோ எவரோ எதற்காகவோ தெருவில் போராடிக் கொண்டே தான் இருக்கிறார்கள். விலைவாசி உயர்வு, சம்பள பிரச்சனை, நீதி கேட்டு, அதிகாரப்பூர்வமற்ற மின் வெட்டுக்காக உண்ணாவிரதம் என்று தெருமுனையில், பேரூந்து நிலையத்தில் இந்தப் போராட்டங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது.

சரியானமுறையில் சிகிச்சை அளித்திருந்தால் என் பிள்ளை இறந்து போயிருக்காது. நான் பிணத்தை வாங்க மாட்டேன்என்று ஒப்பாறி வைத்து அழும் பெண்ணின் முகத்தைத் தொலைக்காட்சியில் நெருக்கமாய்ப் பார்க்கும் போது உள்ளே ஒரு கழிவிரக்கம் உருவாகும். சிலசமயம் நம் கண்ணில் ஒரு முத்து போலக் கண்ணீர் கோர்த்து விடும் என்ற சூழ்நிலையில் ரிமோட் ல் கைவைக்கத் தாண்டிச் சென்று விடுகின்றோம்.

ஆனால் ரிமோட்டில் பட்டனைத் தட்டி அடுத்தச் சேனலில் நடிகை பேசும் கொஞ்சு தமிழ் நமக்கு ரசிக்கக்கூடியதாய் மாறிவிடும். மாறிக் கொண்டேயிருக்கும் உலகில் பலவற்றையும் மறக்கவே விரும்புகின்றோம்.

பந்தல் அமைத்து நிழலில் நின்று போராடுபவர்கள் தொடங்கித் தெருவில் அடக்கு முறையை எதிர்த்து சாலை மறியல் என்பது வரைக்கும் என் ஒவ்வொரு போராட்டத்திற்கும் ஏராளமான காரணங்கள். ஆயுதமேந்தி போராட முடியாது. அடக்குமுறையில் ஒடுக்கப்பட்டு விடும்.

நக்ஸலைட்,தீவிரவாதிகள்,பிரிவினைவாதிகள் என்று பெயர் சூட்டி வாழ்க்கை மொத்தத்தையும் இழக்க நேரிடும். ஒவ்வொரு முறையும் அஹிம்சை மட்டும் தான் இன்றைய போராட்டத்திற்கு அளவு கோலாக இருக்கிறது. போராடலாம். ஜனநாயகத்தில் உனக்கு அந்த உரிமை இருக்கிறது. ஆனால் நீ இப்படித்தான் உன் போராட்ட உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று ஒரு மாதிரியை ஆளும் சமூகம் உருவாக்கியுள்ளது.

ஆனால் தீர்வு ஏதும் கிடைத்ததா? என்றால் அது மௌனசாட்சியாகவே இருக்கிறது. நமக்கு எந்தக் காரணங்களும் தேவையில்லை. ஆதரிக்க நேரமும் இருப்பதில்லை. ஆனால் எப்போதும் எல்லாவற்றையும் விமர்சிக்க மட்டுமே விரும்புகின்றோம். பொதுப்புத்தி என்பது எளிதாக இருப்பதால் எது குறித்தும் அஞ்சத் தேவையில்லை. பத்து பேர்களும் ஒன்றாக யோசிக்கும் போது புதிதாக எதையும் யோசிக்கத் தேவையில்லை. மாற்றிப் பேசினால் நீங்கள் பிழைக்கத் தெரியாதவனாக மாறிவிடுவீர்கள். பொதுஜனம் என்பதற்கான வரையறை என்பதே இதிலிருந்து தான் தொடங்குகின்றது.

நான் உழைத்தேன். உழைக்கத் தயாராக இருக்கின்றேன். நான் நிச்சயம் ஜெயித்து வந்து விடுவேன் என்ற ஒற்றை நம்பிக்கை தான் ஏதோவொரு இலக்கை நோக்கி நம்மை நகர்த்திக் கொண்டே செல்கின்றது. நமது இலக்கைத் தவிர வேறு எதுவுமே நமக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. விலைவாசி உயர்வா? விரும்பிய வசதியான இடத்தை அடைந்து விட்டால் இந்தப் பிரச்சனை நமக்கு உருவாகாது. வேலையில்லா திண்டாட்டத்தைத் தவிர்க்க நன்றாகப் படி. வெளிநாடு சென்று விடு. உன் வாழ்க்கையை நீ நினைத்த மாதிரி அமைத்துக் கொண்டு விடலாம். சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு கருத்தும் நம்மை உருவாக்குகின்றது.

வாழவே தகுதியில்லை. இந்தியாவிற்குள் வரவே மனசில்லை. எப்படி இந்த நெரிசலில் வாழ முடியும் என்ற காரணங்கள் தான் இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவர்களுக்கும், அங்கிருந்து வர விரும்பாதவர்களும் சொல்லும் முக்கியக் காரணமாக இருக்கிறது. ஆனால் இந்த நெரிசலுக்குள் நாமும் உழன்று தான் உருவானோமஎன்பதை எளிதாக மறந்து விடுகின்றோம். வசதிகள் வரும் வரைக்கும் போராடத் தோன்றுகின்றது. ஆனால் விரும்பிய வசதியகள் வந்ததும் உடம்பும் மனசும் அசதியாகி விடுகின்றது. பலவற்றை மறக்கவே விரும்புகின்றோம். மறதி தான் மிகச் சிறந்த வரப்பிரசாதம்.

எது தேவையோ அதை மட்டுமே நினைத்துக் கொண்டால் மீதி அத்தனையும் அவசியமற்றதாக மாறி விடுகின்றது. ஒவ்வொரு போராட்டக்காரர்களும் களத்தில் நின்று போராடிக் கொண்டுருப்பது அவர்களுக்கான உரிமைகள் என்பதோடு அது மறைமுகமாக மொத்த சமூகத்தையும் சார்ந்தது.

போரடிக் கொண்டுருப்பவர்களுக்கு ஏதோவொரு காரணங்கள் இருக்கலாம். ஆனால் பாதிப்பு என்பது மொத்த சமூகத்திற்கும் தான் என்பதை எளிதாக மறந்து போய்விடுகின்றோம். மூடப்பட்ட மில்லில் நம் குடும்பத்தில் எவரோ ஒருவர் பணிபுரிந்தவராக இருக்கலாம். திடீரென்று வாழ்க்கை சூறாவளியில் சிக்கியிருக்கக்கூடும். பாதிப்புகள் இன்று வரையிலும் னதில் நிற்கும். அப்போதும் யாரோ பலர் நீதி கேட்டு போராடியிருக்கக்கூடும். காயம்பட்ட வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் கூட அடுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க விரும்புவதில்லை. விலைவாசி உயர்வுக்கு எதிர்த்து போராடக்கூடியவர்களுக்கு அவர்கள் வீட்டில் வாங்கும் மளிகை சாமான்களுக்கு மட்டும் தான் போராடுகிறார்களா? ஒரு நிறுவனம் காரணம் இல்லாமல் இழுத்து மூடப்படும் போது அதைக் கேட்டு தெருவுக்கு வந்து நின்று போராடுபவர்களுக்கு வாழ்க்கைப் பிரச்சனை. அதுவே நாடு தழுவிய பிரச்சனையாக மாறும் போது அதன் முகமே வேறு விதமாக மாறி விடுகின்றது. போராட எவருக்கும் துணிவில்லை என்பதை விட எவருக்கும் போராட்வே தோன்றவில்லை என்பது தான் இன்றைய எதார்த்தம். அரசாங்கத்தை எதிர்த்து என்ன செய்ய முடியும்? ஆள்,அம்பு,சேனை,படை,பட்டாளங்கள், நெருக்குதல் என்று எல்லாத் திசைகளிலும் வந்து சேரும் நிலைகுலைந்து போகும் மனிதர்களைப் பார்த்து பார்த்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவே விரும்புகின்றோம்.

இது தான் ஆள்பவர்களுக்கும், அரசை இயக்கிக் கொண்டுருப்பவர்களுக்கும் வசதியாகப் போய்விடுகின்றது.

பயமுறுத்து, பயத்தில் வைத்திரு.

இந்த இரண்டு வார்த்தைகள் தான் இன்றைய இந்தியாவின் ஜனநாயகத்தைக் கட்டி காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது. ஆனாலும் இதற்கு அப்பாலும் பல காரணங்கள் இருக்கிறது. நம்மால் வாழ முடிந்த அளவுக்கு நமக்கு வசதிகள் கிடைக்கும் போது வாழ்க்கை என்பது அழகாகத்தான் இருக்கிறது. வசதிகளை விட வாழ்க்கையை வாழவே முடியாதவர்களின் அவலங்களை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தாலும் முகம் திருப்பிக் கொள்ளவே விரும்புகின்றோம். அடுத்த இலக்கு என்று ஒன்று நம் மனதில் இருக்கும். அதை நோக்கி நகர்ந்து கொண்டுருப்போம். குறைந்தபட்சம் நம்மிடம் இருக்கும் வசதிகளைத் தக்க வைக்கப் போராடிக் கொண்டுருப்போம்.

திருப்பூரில் சாயப்பட்டறை பிரச்சனை உச்சத்தில் இருந்த போது அதிசயமாக சாயப்பட்டறை முதலாளிகளின் மனைவிமார்கள் அத்தனை பேர்களும் ஒன்று சேர்த்துத் தெருவில் இறங்கி தங்கள் போராட்டத்தைத் தொடங்கினார்கள். குளுகுளு வசதியில் இருந்தவர்களால் நெருப்பு வெயில் புதிதாக இருக்கப் புழுக்கத்தில் தவித்தார்கள். நம் காவல் துறைக்குச் சொல்லித் தரவும் வேண்டுமா?

உள்ளே பிடித்துப் போட்டால் வெளியே வர மாதக்கணக்கு ஆகும் என்று கொளுத்தி போட்ட வெடியில் மொத்த போராட்டமும் புஸ்வானம் ஆகிப்போனது. இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு எத்தனையோ லட்ச மக்கள் போராடினார்கள். தலைவர்கள் பெயர்களைத் தவிர வேறு எவரின் பெயரும் நமக்கு இன்று வரையிலும் தெரியாது. உண்மையான அடக்கு முறையின் அர்த்தத்தைப் பிரிட்டிஷார் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.

ஆனால் அந்தப் போராட்டத்தின் வலிமையைக் குறைக்க முடியவில்லை. போராடியவர்களின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. காரணம் உள்ளே எறிந்து கொண்டுருந்த கனல். கங்காக மாறி நெருப்பாகக் கொளுந்து விட்டு எறிந்து ஊர் முழுக்கப் பரவி நாடு முழுக்கப் பரவியது.

காரணம் அன்றைய காலகட்டத்தில் சுதந்திரம் என்பது தேவையாய் இருந்தது. இப்போது நமக்கான தேவைகள் மாறியுள்ளது. சக்திக்கும் புத்திக்கும் உள்ள சண்டையில் பல சமயங்களில் நாம் சமாதானமாகி நம்மை நாமே ஆசுவாசப் படுத்திக் கொண்டு விடுகின்றோம்.

ஆனால் வாங்கிய சுதந்திரத்தின் வசதியை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநில மக்களும் ஒவ்வொரு விதமாக அனுபவித்துக் கொண்டுருக்கின்றோம். ஆனால் வசதியுள்ளர்வகள் தொலைக்காட்சியில் ரசனையை வளர்த்துக் கொண்டுருக்க மீதி உள்ளவர்கள் அடுத்த வேளை சோற்றுக்கு உழைத்தே ஆக வேண்டும் என்ற அவசரத்தில் ஆவலாய் ஓடிக் கொண்டுருக்கிறார்கள்.

இன்று நாம் வாழும் வாழ்க்கை, அடைந்த வசதிகள் ஒவ்வொன்றும் யாரோ, எவரோ, ஏதோவொரு இடத்தில் உருவாக்கிய போராட்டத்தினால் வந்தது தான் என்பதை எளிதாக மறந்து அனுபவித்துக் கொண்டுருக்கின்றோம்.

(29.10.2012)

License

பயத்தோடு வாழப் பழகிக் கொள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *