30 கச்சத்தீவு – உண்மைகளும் எதார்த்தமும்

தமிழ்நாட்டில் உள்ள சில பிரச்சனைகளுக்கு மட்டும் எப்போதும் உயிர்ப்பு இருந்து கொண்டேயிருக்கும். இந்தக் காரணமே இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு அல்வா போலவே இனிக்கின்றது.

தற்போது இந்திய அரசியலில் வேலுப்பிள்ளை பிரபாகரன் மகன் இறப்பிற்குப் பின்னால் உள்ள நிகழ்வுகளை வைத்து அரசியல் நடந்து கொண்டு இருக்கின்றது.

இப்போததான் இந்த விசயங்களைக் கேள்விப்படுவது போலத் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதைக் குறித்தும் எப்போதும் போலக் குரல் எழுப்பப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

கச்சத்தீவு பிரச்சனை என்பது தற்போது இந்திய பாரளுமன்றம் வரைக்கும் மீண்டும் விவாத பொருளாக மாறியுள்ளது. ஆனால் இதுவரைக்கும் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட தமிழ்நாட்டு மீன்வர்களைப் பற்றி, அவர்களின் இழந்து போன வாழ்வாரதாரங்களைப் பற்றி எவர் கண்டு கொண்டனர்?

தமிழக மீனவர்களுக்கு விடிவு காலம் உண்டா?

மற்ற தொழிலை விட மீனவ தொழிலில் ஒவ்வொருவருக்கும் கடவுள் பக்தி அதிகம், வெவ்வேறு மதமாக இருக்கலாம், ஆனால் கடவுள் நம்மைக் காப்பாற்றி விடுவார் என்று தான் தமிழ்நாட்டு மீனவர்கள் ஒவ்வொரு நாளும் கடலுக்குச் செல்கிறார்கள், ஆனால் கடந்த பல வருடங்களாகவே கரையில் வந்து சேர்வதென்னவோ அவர்களின் காயம் பட்ட உடம்பும், உயிர் இல்லாத உடம்பும் தான்,

உயிர் பயம் என்றால் உண்மையிலேயே நேரிடையாக நாள்தோறும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் மீனவர்கள் மட்டுமே, இலங்கை கடற்படையினரால் அவமானப்படுத்தப்பட்ட, சித்ரவதை செய்யப்பட்ட, பயமுறுத்தப்பட்ட என்று அவரவர் பட்ட அவமானங்களை அவஸ்த்தைகளைத் தமிழ்நாட்டு கடற்கரையோர மீனவர்களிடம் கேட்டுப் பார்த்தால் வீட்டுக்கு ஒருவராவது இருப்பர். ஆனால் இதற்கெல்லாம் தீர்வு எப்போது கிடைக்கும் என்று கேட்டால் வானத்தை நோக்கி தான் கையைக் காட்டுவர் பல தீர்ப்புகள் காலமாற்றத்தில் திருத்தக்கூடியதாக இருக்கின்றது,

ஆனால் இந்த மீனவர்களின் பிரச்சனைகளுக்குண்டான தீர்ப்புகளை எந்தத் தேவன் தரப்போகின்றார்?

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபிடிக்கப் பிடிக்கப்பட்டனர் என்ற செய்திகள் முதல் சித்ரவதைகளை அனுபவித்துககரை திரும்பிய மீனவர்களின் பேட்டி வரைக்கும் இன்று சாதாரணச் செய்தியாக மாறிவிட்டது, .மற்ற நாடுகளுடன் இந்தியாவுக்கு ஏதோவொரு பிரச்சனை என்றால் அதில் ஏதோவொரு விசயம் மட்டும் தான் பேசும் பொருளாக இருக்கும், ஆனால் இலங்கை என்பதால் அதிலும் தமிழ்நாடு என்பதால் இனம், மொழி என்பதாக மாறிவிடுகின்றது, தொழில் ரீதியான போட்டி பொறாமைகள் அத்தனையும் பின்னுக்குப் போய்விடுகின்றது,

தங்கள் நாட்டு எல்லைக்குள் வருபவர்களை விரட்டுவது, மிரட்டுவது என்பதெல்லாம் கடந்து ஈவு இரக்கமின்றிச் சித்ரவதை செய்து அழகு பார்ப்பது இலங்கைக்குக் கைவந்த கலையாஇருப்பதால் தமிழ்நாட்டு அரசியல்களமும் அவ்வப்போது இந்தப் பிரச்சனையை முன்னிட்டு சூடாகவே கொதித்துக் கொண்டிருக்கிறது, இலங்கையில் நடந்த போர் முடிவுக்கு வந்த பின்னால் அங்கு வாழும் தமிழர்களின் வாழ்வில் தேனும், பாலும் ஓடும் என்பதும் பொய்தது விட்டது,

இந்தியா கொடுத்த நிதி உதவியைக் கூடச் சரியாகப் பயன்படுத்தி வாழ்க்கை இழந்தவர்களுக்கு வீடும் கட்டிக் கொடுத்தபாடில்லை, இலங்கைக்குள் வாழ்ந்தாலும் தமிழர்கள் என்பவர்கள் இன்றுவரையிலும் அகதியாகத்தான் இருக்கின்றார்கள், இலங்கையில் வாழும் தமிழர்கள் சார்ந்த அத்தனை விசயங்களுக்குப் ினனாலும் அதிகமான துயரக்கதைகளே இன்று வரை வந்து கொண்டேயிருக்கிறது,

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஈழமென்பது கடந்த 30 ஆண்டுகளாக விளம்பரத்தை தேடி தரக்கூடிய செய்தி. இங்குள்ள ஒவ்வொரு கட்சிகளும் தனித்தனியாக அறிக்கைகள், பேட்டி ,தீர்மானங்கள் என்று மாறி மாறி லாவணி கச்சேரியாக மாற்றி இது விக்ரமாதித்தன் சொல்ல முடியாத விடையாகத் தான் ஈழத்தீவின் பிரச்சனையும் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனையும் இருக்கிறது, முடிவே தெரியாமல் இன்று வரையிலும் இறக்கும் மீனவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது, ,ஆனால் மீனவர்களின் பிரச்சனையைப் பற்றிப் பேசுபவர்கள் அத்தனை பேர்களும் கடைசியில் ஒரு புள்ளியில் வந்து தான் நிற்கிறார்கள்,

கச்சதீவை இந்தியா கைப்பற்ற வேண்டும்” என்கிறார்கள்.,

கச்சத்தீவு என்பது இவர்கள் சொல்வது போல என்ன இடுப்பில் கட்டியிருக்கும் கச்சைதுணியா? நினைத்த போது மாற்றிக் ொள்ள முடியுமா? இந்தியா நினைத்தால் கச்சத்தீவை மீண்டும் எடுத்துக் கொள்ளத்தான் முடியுமா?

ஏன் மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டி மீனவர்களின் பிரச்சனைகளைக் கண்டு பாராமுகமாக இருக்கிறது என்று பார்த்தால் மீனவர்களின் வலைகளை விட இது மிகவும் சிக்கலாகவே இருக்கிறது, தெளிவற்இந்திய அரசாங்க்த்தின் வெளியுறவுக் கொள்கை, தமிழர்களின் பிரச்சனைகளில் ஆர்வமற்ற அதிகாரவர்க்கத்தினர் என்று ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் கச்சத்தீவு என்பதை இந்தியாவால் கைகழுவப்பட்ட துண்டு நிலம் என்பதே எதார்த்தம், அதில் இனி எந்தக் காலத்திலும் சொந்தம் கொண்டாடுவது என்பது கற்பனையில் வேண்டுமானால் நினைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்,

காரணம் இந்த ஒரு பிரச்சனையில் இந்தியா தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்க என்று கைவைத்தால் வைத்த கை சுட்டுவிடும் என்பதை விடக் கையே இல்லாமல் போய்விடக் கூடிய அபாயமும் உண்டு,

இது தான் ண்மை,

கச்சத்தீவு இலங்கையின் நெடுந்தீவிலிருந்து 10,5 மைல் தொலைவிலும், இராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் அமைந்திருக்கிறது, இந்தத் தீவின் மொத்த பரப்பளவே 285,2 ஏக்கர் மட்டுமே, தமிழக மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்துவதற்கு மட்டும் தான் சென்று கொண்டுருந்தனர், இது தவிர வருடந்தோறும் மார்ச் மாதம் நடக்கும் அங்குள்ள புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவிற்குச் செல்வார்கள்,

தற்போது இந்தக் கொண்டாட்டங்களைக் கூட வேண்டா வெறுப்பாகவே இலங்கை அனுமதிக்கின்றது, இந்தியாவிற்கு அருகே நகம் அளவிற்கு இருக்கும் இலங்கையின் ஒவ்வொரு காலகட்ட ராஜதந்திர நடவடிக்கையின் காரணமாக இன்று இந்தியாவிற்குத் தீராத வலியை தந்து கொண்டுருக்கும் நகச்சுத்தியாக மாறி ரொம்பக் காலமாகி விட்டது,

ஆபத்துக்களுடன் மட்டுமே உயிர்வாழ்பவன் மீனவன், ஆனால் பாய்ந்து வரும் சுழலை, சூறாவளியை தாண்டி வருபவன்

ஆனால் ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையினரிடம் மட்டும் சரியாக மாட்டிக்கொள்ளும் மர்மத்தை தான் இன்று வரை புரிந்து கொள்ள முடியவில்லை, எல்லை தாண்டிச்சென்று ஏராளமான மீன்களை அள்ளிவர என்று நினைத்துக் கொண்டு செல்பவர்களில் முக்கால்வாசி பேர்கள் உயிர்தப்பியதே போதும் என்று தான் எல்லாவற்றையும் இழந்து விட்டு உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் கரைக்குத் திரும்பிக் கொண்டு இருககிறார்க்ள்,

ஒவ்வொரு நாட்டுக்கும் தீர்மானித்த கடல் எல்லைகள் உண்டு, தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டுமல்ல, எந்த நாட்டு மீனவர்களும் இந்த எல்லைக் கட்டுபாடுகளைக் கண்டு கொள்வதில்லை, காரணம் மீன்கள் எங்கே அதிகமாகக் கிடைக்கின்றதோ படகும் அங்கே தானே செல்லும், உலகமெங்கும் இதே நடைமுறையில் மீனவர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டுருக்கிறது,

இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பகுதிகளுக்குள்ளும், இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்பகுதிகளுக்குள்ளும், வங்கதேசத்து மீனவர்கள் மியன்மர் பகுதிகளுக்குள்ளும், ஜப்பான், தைவான் மீன்வர் ஆசிய கடற்பரப்பு முழுவதும் சென்று பிடிப்பதும் வாடிக்கையாக இருந்தாலும் மற்ற நாடுகளை விட இலங்கைக்கும் இந்தியாவிற்குள்ளும் குறிப்பாகத் தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சனை தானதினந்தோறும் பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக வந்து கொண்டு இருக்கின்றது,

இலங்கை, இந்திய மீனவர்களின் களமென்பது இரண்டு நாடுகளுக்குமிடையே இருக்கும் பாக் நீரிணையே ஆகும், இது தமிழ்நாட்டில் உள்ள நாகபட்டிணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கடற்கரைப்பகுதிகளும், இதைப் போல இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம்,மன்னார் மாவட்டங்களில் உள்ள கடற்பரப்புக்கும் இடையே உள்ள பகுதியாக இருக்கிறது,

மீனவளம் அதிகம் உள்ள இந்தப் பகுதிகளுக்குள் நடக்கும் முட்டல் மோதல் தான் கடைசியில் சுட்டுக்கொல்லப்படுவது வரைக்கும் செல்கின்றது, அதுவே அரசியலாக மாற்றப்பட்டு ஆவேச அறிக்கைகள் தினந்தோறும் வர காரணமாக இருக்கிறது, கடைசியில் எப்போதும் போல அடுத்த மீனவர் சாகும் வரைக்கும் அமைதியாகி விடுகின்றது,

ஆனால் மீனவர்களின் பிரச்சனைகளுக்கு முடிவாக எப்போதும் மத்திய அரசாங்கம் மறக்காமல் ஒரு வாசகத்தை நமக்கு நினைவு படுத்தும், மீனவர்கள் தங்கள் எல்லைகளைக் கடந்து செல்லக்கூடாது, ஆனால் தமிழ்நாட்டு மீனவர்கள் மட்டும் தான் கடல் எல்லைகளைக் கடந்து செல்கின்றார்களா?

இலங்கை மீனவர்கள் அரபிக்கடலுக்குள் நுழைந்து கேரள கடற் பகுதி, லட்சத்தீவு, மினிகாய் தீவுகள் போன்ற இடங்களிலும் மீன்பிடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள், இலங்கை மீனவர்களைப் பொறுத்தவரையிலும் முக்கிய இலக்காகச் சூரை மீன் இருக்கிறது,

அது இந்திய கடற்கரைப் பகுதிகளில் தான் அதிகம் கிடைக்கிறது, இதைப் போலவே இந்திய மீனவர்களின் குறியான இறால் மீன் கச்சத்தீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே தான் அதிக அளவு கிடைக்கின்றது, வெளிநாட்டின் ஏற்றுமதி தேவைக்கு இந்த இறால் லாபம் கொழிக்கும் தொழிலாக இருப்பதால் தமிழ்நாட்டு மீனவர்களை எல்லை தாண்டுதல் என்பதைக் கபடி கோடு போலத் தாண்ட வைக்கின்றது,

இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் கையெப்பமஇடப்பட்ட 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுப் போடப்பட்ட ஒப்பந்தங்கள் தான் (சிறீமாவோ இந்திரா காந்தி ஓப்பந்தம்) தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்க்கையில் அவலத்தை அறிமுகப்படுத்தியது, 1973 ஆம் ஆண்டு இலங்கையுடன் உறவை மேம்படுத்த இந்திரா காந்தி நல்லெண்ண பயனமாக இலங்கைக்குச் சென்றார், இரு நாட்டுக்கும் நெருடலாக இருக்கும் கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுக்க இந்திரா காந்தி தன்னிச்சையாக முடிவெடுக்கத் தேவைப்படும் அதிகாரியாகப் பார்த்து இந்த ஒப்பந்தங்களுக்கு ஒரு லாபி உருவாக்கப்பட (1974 ஜுன் 28)ஒரு சுபயோக சுப தினத்தில் கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டது,

இந்த ஒப்பந்தம் இந்திரா காந்தி சிறீ மாவோ பண்டார நாயகாவின் நட்புக்காக என்பது ஒரு பக்கமும், என்னுடைய அரசியல் எதிர்காலம் உங்கள் கைகளில் என்று இந்திராவை நோக்கி சிறீமாவோ விடுத்தக் கெஞ்சலினால் என்பதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்,

கட்டுப்பாடுகள் இல்லாமல் தொழில் செய்து வந்த மீனவர்களுக்கு அரசாங்கத்தால் போடப்பட்ட சட்டதிட்டங்களைக் கண்டு கொள்ளத் தயாராக இல்லை, இதற்கிடையே இந்த மீன் தொழில் காலப்போக்கில் நவீனங்களும் வந்து சேர்ந்து போட்டி போட தங்களது அடிப்படை வாழ்வாதாரமே தமிழ்நாட்டு மீனவர்களுக்குக் கேள்விக்குறியாக மாறத் தொடங்கியது,

எந்திர விசைப்படகுகளுக்கு இணையாகக் கட்டுமரத்தை, நாட்டுப் படகை, வல்லத்தைத் துணையாகக் கொண்டு போராடிக் கொண்டுருப்பவர்கள் என்ன செய்ய முடியும்?

மீன் வளம் குறைந்த பாக் நீரிணைக்குள் இன்று இரு நாட்டு மீனவர்களுக்கும் இரத்தச் சகதியாக மாறும் இடமாக மாறியுள்ளது, கூடவே இலங்கைக்குத் திடீர் கூட்டாளியாக வந்து சேர்ந்துள்ள சீனாவை திருப்திபடுத்த வேண்டிய அவசர அவசிய நிலையிலும் இலங்கை இருப்பதால் கச்சத்தீவு என்பது திருகோணமலை தளத்தைப் போல முக்கியக் கேந்திரமாக இருக்கின்றது,

இந்தியாவின் கடற்கரைபகுதியின் மொத்த அளவு 8,118 கீ,மீ,

ஏறக்குறைய இந்தியாவில் மட்டும் 60 லட்சத்திற்கு மேற்பட்ட மீனவர்களுடன் தொழிலாளர்களுமாய் இந்தத் தொழிலில் இருக்கின்றனர், இதைப் போலவே இலங்கையில் 6 லட்சம் மீனவர்கள் இந்தத் தொழிலை நம்பித்தான் இருக்கின்றனர், தமிழ்நாட்டின் கிழக்குப் பகுதியில் பாக் வளைகுடாவும், வங்காள விரிகுடாவும், தென் கிழக்குப் பகுதியில் மன்னார் வளைகுடாவும், தென்மேற்கில் இந்தியப் பெருங்கடலும் அரபுக் கடலும் எல்லையாக இருக்கின்றது,

அகில இந்திய அளவில் மீன் சார்ந்த தொழிலில் கேரளாவே முதல் இடத்தில் இருக்கிறது, கேரளா, குஜராத்தை தொடர்ந்து தமிழகம் மூன்றாவது இடத்தில் அதாவது இந்தியாவின் மொத்த மீன் உற்பத்தில் 13.25 சதவிகிதத்தை (2008ல் எடுத்த கணக்குப்படி) பெற்றுள்ளது,

1972 ஆம் ஆண்டு இந்தியாவின் வர்த்தக அமைச்சகம் அந்நிய செலவாணியை மனதில் கொண்டு கடல் உற்பத்தி ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தையை (MARINE PRODUCTS EXPORT DEVELOPMENT AUTHORITY MPEDA) உருவாக்கியது,

1990 களில் தான் விலை அதிகமான கற்கள் (கிரானைட்), ஆய்த்த ஆடைகள், மற்ற ஜவுளிப் பொருட்கள் பெற்று தந்த அந்நியச் செலவாணிக்கு இணையாக இந்த மீன்கள் சார்ந்த ஏற்றுமதியும் இந்திய அரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டித்தரத் தொடங்கியது,அதிலும் இறால் மட்டும் 87 சதவிகிதமாக இருக்க, அரசாங்கத்தின் கொள்கையிலும் மாற்றம் வரத் தொடங்கியது, இதன் காரணமாகச் சராசரி மீனவர்களின் வாழ்க்கையிலும் அதிகப் பிரச்சனைகள் வரத் தொடங்கியது

மீன் பிடித்தல் தொழிலில் நவீனங்களைப் புகுத்தினால் அதிகமான லாபத்தை இந்தத் தொழில் மூலம் பெற முடியும் என்று மத்திய அரசாங்கம் முடிவு செய்தது, இந்தக் கொள்கைகளை உருவாக்கியவர்களுக்கு மீனவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைப் பற்றி எதுவும் தெரியாது,

எப்போதும் போல மீனவர்களுக்கென்று நலத்திட்டங்கள் என்கிற ரீதியில் அடுத்த அடிக்கு நகர்ந்து விட்டார்கள், மோட்டார்கள் பொருத்தப்பட்ட படகுகள், ஆழ்கடலுக்குச் சென்று பிடித்த வர உதவும் நவீன ரகப் படகுகள் என்று இந்தத் தொழிலின் முகமே மாறத் தொடங்கியது, கூடவே அந்நிய மூதலீடுகள் மூலம் கூட்டாளிகள் பலரும் இங்கே வரத் தொடங்கினர், கழுத்துவலியுடன் திருகு வலியும் சேர்ந்தது,

மீனவர்களின் போராட்டங்க்ளின் காரணமாக உருவாக்கப்பட்ட முராரி குழு முடிந்த வரை போராடிப் பார்த்தது, இறுதியாக வேறுவழியின்று 1996 ஆம் ஆண்டுக் கொடுக்கப்பட்ட புதிய உரிமங்கள் அத்தனையும் 1997 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் ரத்தசெய்தது,

இந்தத் தொழிலில் உள்ள லாபங்களைப் பார்த்து மீனவ சாதிகளைத் தவிர மற்ற பணம் படைத்த அத்தனை பேர்களும் குறிப்பாக அரசியல்வாதிகளுக்குக் கொழுத்த வேட்டையாக அமைந்து விட் புதுப்புது நவீனங்கள் உடனடியாக வரத்தொடங்கியது. முதன் முதலாகக் கேரளாவில் நார்வே நாட்டின் மூலம் அறிமுகமானது தான் பாட்டம் ட்ராலிங் (Bottom Trawling). என்பது, அதாவது மடிவலையை உபயோகித்து மீன் பிடிப்பது,

இதன் மூலம் இறால் ஏராளமான அளவில் கிடைத்ததால் இது மற்ற மாநிலங்களுக்கும் வேகமாகப் பரவியது, வல்லங்களில் பிடிக்கும் மீனவர்களுக்கும் இது போன்ற ட்ராலிங் மூலம் பிடிப்பவர்களுக்கும் உருவான மோதல் நாளுக்கு நாள் அதிகமானது, ட்ராலிங் மூலம் மீன்கள் மட்டும் பிடிக்கப்படுவதில்லை, குஞ்சு குழுவான் வரைக்கும் அத்தனையும் துடைத்து எடுத்தாற்போல மொத்த மீன் வளத்தையே மாற்றி விடுவதால் முந்திக் கொண்டவர்கள் சடுதியாக மேலேறே தொடங்கினார்கள்,

பாரம்பரிய மீனவர்களின் வருத்தமே இது தான், இதன் காரணமாகவே குறிப்பிட்ட இடங்களில் மீன்கள் அதிக அளவு கிடைக்காமல் போக எல்லைகளைக் கடந்தால் தான் மீன்கள் கிடைக்கும் என்ற நிலையும் உருவானது, அரசாங்க ரீதியில் எத்தனை ஒப்பந்தங்கள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் உருவான போதிலும் ஏன் இந்த மீனவர்களின் பிரச்சனை மட்டும் முடிவுக்கு வராமல் சுழல் போல் சுழன்றடிக்கின்றது?

1991 ஆம் ஜெயலலிதா முதன் முறையாக ஆட்சிக்கு வந்த போது ஆகஸ்ட் 15 அன்று கோட்டையில் கொடியேற்றிய போது கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க வேண்டும் என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தார், இது கலைஞர் விடுத்த அறை கூவல், அதாவது பழைய மொந்தையில் புதிய கள், தொடர்ந்த ஒவ்வொரு கட்சிகளும் மனம் போன போக்கில் இதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்,

ஆனால் எதார்த்தம் என்பது வேறு,

இலங்கையுடன் இந்தியா செய்து கொண்டிருக்கும் இந்த ஒப்பந்தங்களைப் போல அருகே உள்ள மியன்மர், இந்தோனேசியா, மாலத்தீவுகள், தாய்லாந்து, பல நாடுகளுடன் பல சர்வதேச ஒப்பந்தங்கள் போட்டுள்ளன,

தனி ஈழம் கேட்க ஆதரவளித்தால் இந்தியா முதலில் காஷ்மீர் பிரச்சனையில் கவனம் செலுத்தி அவர்களுக்குண்டான சுதந்திரத்தை கொடுக்கட்டும் என்பது போன்ற குண்டக்க மண்டக்கக் கோரிக்கையை இலங்கை ,நா சபையில் எழுப்புவதைப் போல இந்தக் கச்சத்தீவு ஒப்பந்த பிரச்சனை இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கும், முடிந்து போன ஒப்பந்தத்தை முடக்கவும் முடியாது, உயிர்ப்பிக்கவும் முடியாது,

இது தான் உண்மை,

ஆனால் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையை இந்தியா நினைத்தால் உருவாக்க முடியும், இந்த விசயத்தில் ஏற்கனவே ஒரு முன் உதாரணம் உண்டு, தீன்பிகா என்ற இடம் குறித்து 1974 மே 16ல் இந்தியாவிற்கும் வங்க தேசத்திற்கும் ஒரு ஒப்பந்தம் உருவானது,

இதன் முழுவிபரத்தை நாம் இங்கே பார்ப்பதை விட இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா வங்க தேசத்திற்கு நீண்ட காலக் குத்தகையின் அடிப்படையில் விட்ட காரணத்தால் பேருபரி விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது, இதைப் போலவே இரு நாட்டு மீனவர்களுக்கும் பிரச்சனை இல்லாத திட்டங்களை உருவாக்க முடியும்,

குறிப்பிட்ட எல்லைகளை வகுக்க முடியும், குறிப்பிட்ட காலகட்டத்தினை இரு நாட்டு மீனவர்களுக்கும் அளித்து அந்தந்த காலகட்டத்தினை அவரவர் மீன்பிடிக்க உதவ முடியும், அடையாள அட்டையை உருவாக்கி இரு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான உறுதிப்பாட்டினனை இரு நாடுகளும் சேர்ந்து கச்சத்தீவில் உருவாக்க முடியும்,

னால் இது இந்தியாவின் வெளியுறவு சம்மந்தப்பட்ட பிரச்சனை, தமிழ்நாட்டு அரசாங்கம் வெறுமனே வேடிக்கை தான் பார்க்க முடியும், இந்தியாவின் வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களிடம் நீங்கள் எதுவும் சொல்ல முடியாது, தமிழர்களின் பிரச்சனையை அறியாத வேறு மாநில அதிகாரியிடம் நீங்கள் என்ன சொன்னாலும் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருக்கும், இங்கிருந்து சொல்வதைக் கேட்கும் அளவுக்கு அவர்களுக்குப் பொறுமையும் இல்லை,

இப்போதைய சூழ்நிலையில் இந்தியாவிற்குத் தேவைப்படும் வணிகரீதியான சந்தைகள் தான் முக்கியம், இலங்கையில் நடந்து முடிந்த போர் முடிவுக்கு வந்த காலம் தொட்டு இந்தியா இலங்கையில் போடும் முதலீடும் வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது,

இந்திய வணிகம் முக்கியமா? தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் முக்கியமா? இதையெல்லாம் விடப் பிரச்சனைகளை முறைப்படி தெரிவித்து இந்தப் பிரச்சனைக்கு ுடிவு கட்ட எவருக்கும் இங்கே அக்கறையும் இல்லை என்பது தான் நிதர்சனம்,

காரணம் தமிழநாட்டில் அரசியல் செய்ய வேண்டியவர்களுக்கு இந்த மீனவர்களின் பிரச்சனை என்பது அள்ள அள்ள குறையாத அமுதசுரபி, மீனவர்களுக்குப் பிரச்சனை இல்லாமல் போனால் ஈழத்தை நோக்கி தேர்தல் சமயங்களில் மட்டும் எப்படி அறைகூல் விடுத்து அரசியல் நடத்த முடியும்?

(09.03.2013)

License

பயத்தோடு வாழப் பழகிக் கொள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *