7 ஐந்து – ‘வலை’த்ததும் வளையாததும்

1994 ஆம் ஆண்டு

திருப்பூர் வாழ்க்கையில் திருமணத்திற்க முன் நான் தங்கியிருந்த அறைக்குச் சென்னையிலிருந்து ஒரு நண்பர் வந்திருந்தார். மூன்று பேர்கள் மட்டுமே தங்கும் அறை. அவரசென்னை என்றதும் நானும் என் அறையில் இருந்த கேரளாக்காரர் விஜயனும் அவருடன் ஒட்டாமல் ஒதுங்கியே தான் இருந்தோம்.

நாங்கள் இருவரும் ஆறு மணிக்கே எழுந்து அடிப்படை வேலைகளை முடித்து விட்டு 7 மணிக்கு எங்கள் அறைக்கு மட்டும் வரும் செய்திதாள்களைப் படிக்கத் தொடங்கி இருப்போம். எட்டு மணிக்கு அலுவலகத்திற்குக் கிளம்பி விடுவோம். ஆனால் எங்கள் அறைக்கு வந்திருந்த புதிய நண்பர் எட்டு மணி ஆன போதிலும் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டார்.

நாங்கள் காலை எழுந்தவுடன் எங்கள் படுக்கையைச் சுருட்டி வைப்பது முதல் உள்ளே உள்ள மற்ற அத்தனை ொருட்களையும் வீடு போலச் சுத்தமாக வைத்திருப்போம். அங்குள்ள முக்கால் வாசி அறைகள் திறந்தே இருக்காது. ஆனால் எங்கள் அறையில் காலை முதல் பக்தி பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். நாங்கள் அப்போது இருந்த TKW விடுதியின் முதலாளி எங்கள் அறையைச் சுட்டிக்காட்டி மற்ற அறையில் உள்ளவர்களைத் திட்டி பேசியிருப்பதைப் பார்த்து இருக்கின்றோம். ஆனால் புதிததாக வந்தவரின் காலை வாழ்க்கை 9 மணிக்குத் தான் துவங்கும்.

அவரது அலுவலகம் காலை பத்து மணிக்குத்தான் தொடங்கும். அப்போது தமிழ்நாட்டிற்குள் காலடி வைத்த சலோரா நிறுவனத்தின் ஃபேக்ஸ் கருவியின் சர்வீஸ் இஞ்சினியராகப் பதவி உயர்வு பெற்றுத் திருப்பூரில் தொடங்கி இருந்த அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

எங்கள் இருவரின் நடவடிக்கைகளுக்குத் தலைகீழாக ஒவ்வொன்றையும் செய்து கொண்டிருந்தார். நல்ல சாப்பாட்டு ராமனும் கூட. அறையை ரொம்பச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் எங்கள் இருவரின் நோக்கங்களுக்கு மிகுந்த சவால்களைத் தந்து கொண்டிருந்தார். முதல் மூன்று மாதங்கள் நிறையச் சண்டைகள் வந்தது. ஆனால் நான்காம் மாதம் முதல் நான் அவருடன் சேர்ந்து விட்டேன்.

எங்கள் இருவரையும் ஒரு விசயம் ஒன்று சேர்த்தது.

அது தான் சாப்பாட்டுச் சமாச்சாரங்கள்..

அவர் பணி முடிந்து அறைக்குத் திரும்பும் இரவு வேலையில் ஒவ்வொரு கைவண்டி கடையாகச் சென்று வாங்கிக் தின்று கொண்டே வருவதை எனக்கும் அறிமுகம் செய்து வைக்க அடுத்த ஒரு மாதத்தில் என்னுடன் ரொம்பவே நெருங்கி விட்டார்.

என்னுடன் தொடக்கம் முதல் இருந்த விஜயனுக்கு ரொம்பவே ஆச்சரியம். ‘யாருடனும் அத்தனை சீக்கிரம் ஒட்ட மாட்டானேஎன்று அங்கலாய்ப்புடன் புலம்பிக் கொண்டே அவரும் எங்கள் தீனிக் கூட்டத்தில் சேர்ந்து விட்டார். தினந்தோறும் வண்டிக் கடையில் விற்கும் பொறித்த மீன்களுக்கு மூவரும் நிரந்தர வாடிக்கையாளராக மாறிப் போனோம். சென்னையில் இருந்த வந்த நண்பர் தான் திடீரென்று என்னிடம் கேட்டார்.

நாளை முதல் கம்ப்யூட்டர் கிளாஸ்க்குப் போகப் போகின்றேன். நீங்களும் வாங்கஎன்று என்னையும் அழைத்தார்.

காலை வேலையில் அவர் வைத்திருந்த ஸ்வேகா வாகனத்தில் அழைத்துச் செல்லும் பழக்கத்தை உருவாக்கினார். இயல்பான கட்டணம் என்பதோடு வாரத்தில் மூன்று நாட்கள் என்பதால் எனக்கு எளிதாக இருந்தது. அப்போது திருப்பூருக்குள் கம்ப்யூட்டர் சென்டர் என்பது அரிதாகவே இருந்தது. அங்கே நிறையப் பெண்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் இருவரையும் தவறாமல் அங்கே செல்ல வைக்க இதுவும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. தொடக்கத்தில் மைரோசாப்ட் வேர்ட், எக்செல் என்று தொடங்கினார்கள்.

ஒரு மாதத்திற்குள் FOX PRO என்று தொடங்க ஆர்வத்துடன் தான் கற்றுக் கொண்டோம். ஆனால் நான் பணிபுரிந்து கொண்டிருந்த உற்பத்தித் ுறைக்கு இது தேவையில்லாமல் இருந்தது.

நாள்பட இது வெறுமனே எழுத்து வடிவமாகவே இருக்கப் புதிய சவால்கள் ஏதும் இல்லாது போக என் ஆர்வம் குறையத் தொடங்கியது. நான் பின்வாங்கி நின்று விட்டேன். நண்பரும் சில வாரங்களில் நின்று விட்டார். அந்தச் சில மாதங்களில் நான் பார்த்த படித்த கணினி சம்மந்தபட்ட விசயங்கள் எனக்கு மீண்டும் அறிமுகமான ஆண்டு 2002.

2002 ஆம் ஆண்டு.

எனக்கு அலுவலக ரீதியான கணினி என்பது அறிமுகமானது.

மின் அஞ்சல், வலைதளம் போன்ற அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகமாகி புதிய உலகத்தைப் பார்க்க வழி செய்தது. எல்லாமே அலுவலகம் சார்ந்த விடயங்கள். வெளிநாட்டுத் தொடர்புகள். ஏற்றுமதியின் அலுவலக ரீதியான சூட்சமங்கள். தொடர்பு வட்டங்கள் விரிவிடைந்து கொண்டே சென்றது. தொழிலுக்குத் தேவைப்படும் ஆங்கில அறிவு வளரத் தொடங்கியது. மிகக் குறுகிய காலத்திற்குள் ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டு சற்று தெளிவான நிலைக்கு உயர்ந்திருந்தேன்.

2004 ஆம் ஆண்டு.

சொந்தமான இரண்டு சக்கர வாகனம் கைக்கு வந்த பிறகு தான் சொந்த கணினி ஆசை உருவானது. நாம் எப்படியும் சொந்தமாக ஒரு கணினியை வாங்கி விட வேண்டும் என்று நண்பர் நாகராஜிடம் சொன்ன போது அவர் பின்னங்கால் பிடறி தெறிக்க ஓடினார். காரணம் கையில் ஆயிரம் ரூபாய் கூடச் சேமிப்பில் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் போது 50 000 ரூபாய்க்கு மேல் உள்ள கணினி சார்ந்த திட்டங்களைச் சொன்ன போது அலறி அறிவுரையை வழங்கி விட்டு சென்று விட்டார். ஆனால் என்னுடைய ஆசைகள் வெறித்தனமாக உள்ளே இருந்தத.

இது குறித்த என் துரத்தல்கள் பலரையும் சென்று பார்க்க வைத்தது. யாரிடம் பேசினாலும் கடைசியாக இந்தக் கணினி குறித்த விசயங்களைப் பற்றிக் கேட்க பழகிக் கொண்டிருக்கும் பலரும் ஓடத் துவங்கினார்கள். காரணம் எவருக்கும் இது குறித்த அக்கறையில்லை என்பதை விட அவரவரும் மாதச் சம்பளத்திற்குள் தான் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் என் ஆசை நின்றபாடில்லை.

நண்பர் நாகராஜ் வேறொரு நண்பரின் வேலைக்காகக் கொங்கு நகரில் இருந்த கனரா வங்கிக்குச் சென்ற போது அங்கிருந்த மேலாளர் அறிமுகமானார். அவரின் சொந்த ஊர் நாகர்கோவில் என்று தெரிய நானும் ாகர்கோவில் தான் என்று நாகராஜ்ம் அறிமுகம் செய்து கொள்ள இருவரும் நெருங்கி விட்டனர். அப்போது தான் அவர் நாகர்கோவிலில் இருந்து திருப்பூருக்கு மாற்றலாகி வந்திருந்தார். அடுத்த இரண்டு மாதத்திற்குள் நண்பர் நாகராஜ் உடன் வங்கி மேலாளர் ரொம்பவே நெருங்கி விட்டார். காரணமஅவருக்கு வீடு பிடித்துக் கொடுத்தது முதல் பல சொந்த வேலைகளைச் செய்து கொடுத்து நாகராஜ் நன்றாகவே காக்கா பிடித்துருந்தார்.

இது தான் சமயமென்று நண்பர் அவருக்குத் தேவைப்பட்டுக் கொண்டிருந்த பர்சனல் லோன்ஏதாவது கிடைக்குமா? என்று கேட்க அவரும் பச்சைக்கொடி காட்ட ப்போது தான் என் சம்மந்தபட்ட விசயங்களை அவருக்குச் சொல்லி அவருடன் சந்திக்க ஏற்பாடு செய்தார். அடுத்த ஒரு மாதத்திற்குள் மூத்த அண்ணன் அரசு அலுவலராக இருக்க அவர் கையெழுத்து போட்டு வங்கிக் கடன் கிடைக்கக் கனவில் வைத்திருந்த கணினி ஆசைகளுக்கு உயிர் வரத் தொடங்கியது.

அப்போது சிறிய அளவில் கணினி தொழிலில் இருந்த நண்பர் விஜய் அறிமுகமாக அவர் மூலம் மற்றொருவர் அறிமுகம் ஆனார். வங்கி கேட்ட கொட்டேஷன் போன்ற சமாச்சாரங்களை அவர்கள் பார்த்துக் கொள்ள எல்லாமே இலகுவாக நடந்தது. அப்போது தான் அவர்களிடம் சொல்லி வைத்தேன்.

விசைப்பலகையில் தமிழ் எழுத்துக்களும் வரும்படி உள்ள வசதியான விசைப்பலகை வேண்டும் என்று கேட்டிருந்தேன்.அதுவரையிலும் அவர்களிடம் கேட்ட எவரும் இது போன்று கேட்டதில்லை என்றனர். தமிழ் எழுத்துக்களும் சேர்ந்து உள்ள விசைப்பலகையோடு என் இசை விருப்பங்கள் சார்ந்த துணைக் கருவிகளோடு மொத்தமாக வீட்டுக்குள் வந்து சேர்ந்த போது மொத்த வங்கிக் கடன் வட்டியோடு ஒன்னேகால் லட்சம் என்று தீட்டி பத்திரங்களில் கையெழுத்து வாங்கியிருந்தனர்.

ஏறக்குறைய மூன்று வருட தவணை என்று ஒலையைக் கொடுத்து கையெழுத்து வாங்கியிருந்தார்கள்.

இரண்டு மாத போராட்டத்திற்குப் பிறகு தொலைபேசி அழைப்பு வீட்டுக்குக் கொண்டு வர இணைய இணைப்புக் கிடைத்தது. அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்தால் சொந்த தொழில் ஆசைகளை நள்ளிரவு வரை விடாமல் பல திசைகளிலும் விரட்டி முயற்சித்துக் கொண்டேயிருந்தேன்.

அப்போது தான் சொந்த மின் அஞ்சல் முகவரியை உருவாக்கினேன். அப்போதஇருந்த VSNL.NET என்ற பெயரில் எனக்கென்று ஒரு மின் அஞ்சல் முகவரியைக் கொடுத்து இருந்தனர்.

அதன் பிறகே SIFY.COM அறிமுகமாக அதில் தான் முதன் முதலாக என் பெயரில் தனியாக மின் அஞ்சல் முகவரியைத் தொடங்கினேன். தொடர்ந்து YAHOO, HOTMAIL என்று பல விதமான மின் அஞ்சல் முகவரியோடு 2007 ஆம் ஆண்டு வரைக்கும் இந்தப் பயணம் தொடர்ந்து கொண்டிருந்த போதிலும் தனிப்பட்ட முன்னேற்றம் எதுவும் கிடைத்தபாடில்லை. ஆனால் அண்டார்ட்டிக்கா தவிர உலகில் உள்ள அத்தனை தேசங்களிலும் உள்ள அத்தனை விசயங்களையும் தேடிப்பார்த்த காலமது.

மாதச் சம்பளத்தோடு கடன் வாங்கியும் தொலைப் பேசி இலாகாவிடம் மாதம் மாதம் போய்க் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது இப்போது போலப் பலவிதமான கட்டண சலுகைகள் எதுவும் இல்லை.

2007 ஆம் ஆண்டு.

அப்போது பணிபுரிந்து கொண்டிருந்த அலுவலகத்திற்குத் தொழில் ரீதியான ஒரு நண்பர் வந்திருந்தார். அவர் அலுவலகத் தொடர்பு சார்ந்த ஒரு மின் அஞ்சலை அனுப்பிய போது அதில் ஜிமெயில் என்று போட்டிருக்க அப்போது தான் அது குறித்து அவரிடம் கேட்ட போது ஜிமெயில் குறித்தும் அதன் வசதிகளைப் பற்றியும் என்னிடமும் சொன்னார். அப்பொழுதே அவர் மூலம் நான் உருவாக்கி வைத்திருந்த என் தொழில் நிறுவனப் பெயரில் ஒரு மின் அஞ்சல் முகவரியை உருவாக்கினேன்.

ஆனால் கடந்து போன வருடங்களில் தமிழ் குறித்து நான் வைத்திருந்த மென்பொருள் மூலம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனதில் தோன்றியவற்றை அடித்துச் சேமித்து வைத்திருப்பேனே தவிர இணையத் தளங்களில் தமிழ் மொழியும் உண்டு என்பதை 2009 ஆம் மே மாதம் தான் தெரிய வந்தது. அது வரைக்கும் நான் பயன்படுத்திக் கொண்டிருந்த பல்வேறு அத்தனை மின் அஞ்சல் முகவரிக்கு பல நாட்டின் இறக்குமதியாளர் குறித்து விபரங்கள், அந்த நாடு குறித்த அறிமுகம் என்று ஆங்கிலம் சார்ந்த தகவல்கள் தான் வந்து கொண்டிருந்தது.

2009 மே மாதம்

இந்த மாத மத்திம பகுதியில் வேர்ட்ப்ரஸ் தளம் ஏதோவொரு தேடலில் வந்து எட்டிப் பார்க்க, கண்களில் தென்பட்ட தமிழ் தளத்தை ஆச்சரியமாக உள்ளே சென்று பார்த்த பிறகு தான் இந்தத் தமிழ் இணையம் அறிமுகமானது.

அடுத்த மூன்று வாரங்களில் தடவித் தடவி என்னுடைய பெயரில் ஒரு வேர்ட்ப்ரஸ் தளத்தை உருவாக்கிப் பார்த்த போது அது தோல்வியில் முடிந்தது. மீண்டும் என் தொழில் நிறுவன பெயரில் முயற்சித்து ஜுலை மத்திம பகுதியில் ஒரு தளத்தை உருவாக்க முடிந்தது.

வெற்றிகரமாக ஜுலை 2009 3 அன்று எழுதிய விசயங்களை வெளியிட்டு வைத்தேன். .

இன்று என்னுடைய ஜிமெயிலுக்கு ஒரு நாளைக்கு நூற்றுக் கணக்கான மின் அஞ்சல் வந்து விழுந்து கொண்டேயிருக்கின்றது. அத்தனையும் தமிழ் சார்ந்த, பதிவுகள் சார்ந்த விசயங்கள் மட்டுமே. இன்று ஹாட் மெயில் முடிந்து போய் அதுவும் வேறு பெயரில் மாறிவிட்டது. சிஃபி பக்கம் சென்று வருடக்கணக்காகி விட்டது. அதன் தன்மைகளையும் பல முறைகள் மாற்றி விட்டனர். தொடக்கம் முதல் இன்று வரையிலும் யாகூ தான் எனக்குப் பல வகையிலும் எல்லா நிலையிலும் உதவியாக இருக்கிறது.

ட்விட்டர், முகநூல் அறிமுகமான போது அதற்கென்று ஒரு மின் அஞ்சல் முகவரி வேண்டும் ன்று AOL மின் அஞ்சல் முகவரியை உருவாக்க அதில் இன்று வரையிலும் படிக்காத மின் அஞ்சல்கள் என்கிற வகையில் 2000க்கு மேலே உள்ளது. மொக்கை, மொன்னை, அற்புதம், அழகு, சிந்தனை, ஆச்சரியம் என்று கலந்து கட்டி இந்த இணையம் என்னைக் கொண்டு செலுத்திக் கொண்டேயிருக்கிறது. யார் யாரோ வந்தார்கள். யார் யாரோ பிரிந்தும் சென்றார்கள். புதுப்புது நண்பர்கள் அறிமுகமாகிக் கொண்டேயிருக்கின்றார்கள். முடிவில்லா சுழல் போல இழுத்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. இந்தப் பாதை எங்கே செல்லும்? என்று தெரியவில்லை. ஆனால் சுவாரசியமாக இருக்கிறது..

ஆனால் து வரையிலும் என்ன கற்றுக் கொண்டேன் என்பதும் தெரியவில்லை.

INFORMATION IS WEALTH என்கிறார்கள்.

இன்று தேர்ந்தெடுப்பதில் தான் சவால்கள் அதிகமாக உள்ளது. அறை குறை அறிவு பெற்றவன் கூட இணையத்தில் எழுத முடிகின்றது. இன்று அனைத்தையும் அறிந்தவன் போல எளிதில் வெளிக்காட்டிக் கொள்ள முடிகின்றது.

எவர் எவரோ சொன்னதை வைத்துக் கொஞ்சம் வெட்டி ஒட்டி இன்று வரை எழுத்து என்ற பெயரில் ஜல்லியடிக்க முடிகின்றது. நான் இப்படித்தான் என்னை வளர்த்துக் கொண்டேன். யாரோ எழுதி வைத்தார்கள். யாரோ சொன்னார்கள். ஆனால் நான் சொல்வதாக எழுத முடிகின்றது.

தாவது ஒரு சந்தேகம் என்றால் இருக்கவே இருக்கு நம்ம கூகுள் ஆண்டவர். கருணை மிகுந்தவர். கண்டதையும் கற்றுத் தர தயாராக இருப்பவர். மத மாச்சரியம் அற்றவர். சாதிப் பாகுபாடுகள் கூட இவரிடம் இல்லை. மந்திரங்கள் எதுவும் தேவையில்லை. ஆர்வமிருப்பவர்களை என்றும் ஆதரிப்பவர்.

தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்என்பதை ஒவ்வொரு நாளும் உணர்த்திக் கொண்டேயிருப்பவர்.

நான் கற்றுக் கொண்டே கடந்து வந்த பாதையின் நீளத்தையும் அகலத்தையும் இந்த நான்காம் ஆண்டின் முடிவில் எழுதி வைப்பது பொருத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இதையும் இங்கே எழுதி வைக்கத் தோன்றியது. ஐந்து வயதில் முதல் வகுப்புச் சென்ற காலம் போய் இன்று ஐந்து வயதில் பாலர் பள்ளி மூன்றாண்டுகளைக் கடந்து வர வேண்டியதான இன்றைய கல்விச்சூழல் முழுமையாக மாறியுள்ளது. ப்ரிகேஜி, எல்கேஜி, யூகேஜி என்று நான் படித்த மூன்றாண்டு பட்டப்படிப்பபோலவே படித்து முடித்து இன்றுள்ள குழந்தைகள் முதல் வகுப்புக்கு வந்து சேர்கின்றார்கள். இன்று நானும் முதல் வகுப்புக்கு இடம் பெயரப் போகின்றேன். தவழ்ந்து, நடக்க, பேசப் பழகிய குழந்தைகளின் வாழ்க்கை முதல் வகுப்பு முதல் முக்கியமானது.

வாழ்க்கையின் முதல்படியாக இருப்பதால் இனி வரும் காலங்களைச் சற்று நிதானத்துடன் பொறுப்புடன் குறிப்பிட்ட திசை நோக்கி நகர்த்த வேண்டும் என்று மனதில் வைத்துள்ளேன்.

எந்த இடத்திலும் வளைந்து கொடுக்காமல் அப்பா சொல்லாமல் கற்றுக் கொடுத்து விட்டுச் சென்ற நேர்மையைத் துணை கொண்டு திருப்பூரில் இது வரையிலும் நான் வாழ்ந்த வாழ்க்கையில் எழுதக் கற்றுக் கொண்ட பிறகு கற்றதையும் பெற்றதையும் பதிவுகளாக மாற்ற முடிந்துள்ளது.

என்னை நானே வளைத்துப் பார்த்துக் கொள்ள இந்தப் பதிவுலகம் உதவியுள்ளது. நான் கடந்து வந்த வழித்தடங்களில் பார்த்த மேடு பள்ளங்களைப் பதிவுகளாக மாற்ற ுடிந்ததுள்ளது. இரண்டு நாளைக்கு முன் சந்தித்த திண்டுக்கல் தனபாலன் மாமனார் உங்கள் டாலர் நகரம் புத்தகத்தை முழுமையாகப் படித்து முடித்து விட்டேன்.

தினந்தோறும் நான் சோர்ந்து போகும் போது மீண்டும் மீண்டும் படித்துப் பார்க்கின்றேன். உங்களின் பல சிந்தனைகள் எனக்குளபுதிய பல தாக்கத்தை உருவாக்குகின்றது. உங்களின் ஆங்கிலக் கல்வியும் அரை லூசு பெற்றோரும்என்ற கட்டுரையை அடிப்படையாக வைத்து எங்கள் சமூக மக்கள் நடத்தும் பள்ளியில் உரையாற்றிப் பெரிய அளவில் கைதட்டலைப் பெற்றேன்என்ற போது அவரின் 70 வயது அனுபவங்கள் முன் கூச்சத்துடன் தடுமாறினேன். இந்திய அளவில் ஒரு அமைப்பிற்குத் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் சொன்ன வார்த்தைகள் என் தகுதிக்கு மீறியதாகவே இருந்தது.

நான் எழுதிய விசயங்கள் மற்றவர்களுக்கு உதவியதோ இல்லையோ என்னைப் பல விதங்களிலும் மெருகேற்றியுள்ளது என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். எழுத்தில் இது வரையிலும் வளைக்க முடியாத பல விசயங்களை இனி முயற்சித்துப் பார்க்க வேண்டும். கற்றுக் கொள்வதற்கு வயதில்லை. மீண்டும் கற்றுக் கொள்ளத் தொடங்கப் போகின்றேன். ( ஜுன் 3 2013)

License

பயத்தோடு வாழப் பழகிக் கொள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *