10 ஐந்தில் கற்றதும் பெற்றதும்

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், சுறுசுறுப்பாக இருந்தாலும் அல்லது செயல்படாத நிலையில் வாழ்ந்தாலும் நம்மைச் சுற்றிலும் உள்ள உலகம் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றது. நாம் சுகமாய் இருக்கின்றோம் அல்லது சோகத்தில் இருக்கின்றோம் என்பதற்காக எதுவும் இங்கே மாறிவிடப்போவதில்லை. இங்கே ஒவ்வொன்றின் முடிவும் நொடிப் பொழுது மட்டுமே. அடுத்தடுத்து அதன் போக்கிலேயே நகர்ந்து கொண்டேயிருக்கின்றது. இந்தியாவில் ஏதோவொரு இடத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை எனக்கு வெறுமனே செய்தி மட்டுமே. என்னை, என் குடும்பத்தைத் தாக்காத வரைக்கும் ஒவ்வொரு செயல்பாடுகளும் கடந்து போக வேண்டிய, மறுநாள் பத்திரிக்கையில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தியாகவே உள்ளது. ஒவ்வொருவருக்கும் இப்படித்தான். இதனால் தான் இந்தியாவில் எந்தப் பிரச்சனையும் பொதுப் பிரச்சனையாக மாறாமல் துணுக்கு செய்தியாகவே மாறி விடுகின்றது.

பச்சாதாபத்திற்கோ, பரிதாபப்படுவதற்கோ எவருக்கும் நேரம் இருப்பதில்லை. எதிர்பார்ப்பதில் பலன் ஒன்றுமில்லை. ஏமாற்றங்களை, சோகங்களை எதார்த்தமாக எடுத்துக் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தால் தான் இங்கே உயிர்ப்புடன் வாழ முடியும். நம் தேடல் மட்டுமே நம்மை இயக்குகின்றது. தேடிச் சென்றால் மட்டுமே துன்பம் விலகுகின்றது. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகின்றது. நம் ஆசைகளின் எல்லைகளையும், நமது தகுதியையும் இணைத்துப் பார்க்கும் போது மட்டுமே நம் வாழ்க்கையில் அமைதி உருவாகின்றது.

ஐந்தாண்டுகளுக்கு முன் அறிமுகமான தமிழ் இணையத்தின் ஆழமும் அகலத்தையும் குறித்து அப்போது எனக்கு அதிகம் ோசிக்கத் தெரியவில்லை. நீச்சல் தெரியாதவன் கடலில் குதித்தது போலவே இருந்தது. ஆனால் இன்று? பலரும் என்னைக் கவனித்துள்ளனர். சிலரை என் எழுத்து மூலம் திருப்திப் படுத்தி உள்ளேன். வாசித்த அந்தப் பத்து நிமிடத்தில் நான் வாழ்ந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்துள்ளேன். என் குடும்பத்தை நினைத்துள்ளேன். ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கும் என் குழந்தைகளை நினைத்து ஏங்கியுள்ளேன் என்று உரையாடலில், விமர்சனத்தில் தெரிவித்துள்ளனர்.

வியப்பாகவே உள்ளது.

உலகம் முழுக்கப் பரந்து விரிந்துள்ள இணையத்தில் யாரோ ஒருவர் ஏதோவொரு இடத்தில் இருந்து கொண்டு ஒவ்வொரு நிமிடத்திலும் தன் கருத்து என்று ஏதோவொன்றை சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றார்கள். நாம் விழித்திருந்தாலும், கண்டு கொள்ளாமல் கடந்து போனாலும் தமிழ் இணையம் அதன் சுறுசுறுப்பை இழந்து விடுவதில்லை. நாளுக்கு நாள் இதன் வேகம் கூடிக் கொண்டேதான் இருக்கின்றது. எதைப் பற்றி எழுத வேண்டும் என்று தெரியாதவர்களுக்கும், எதையாவது எழுதி மற்றவர்கள் நம்மை நோக்கி திரும்பி பார்க்க வைத்துவிட வேண்டும் என்பவர்களுக்கும் மத்தியில் தான் தமிழ் இணையம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

முறைப்படி பயன்படுத்த தெரியாதவர்கள் படும் அவஸ்த்தைகளும், இதுவே தான் வாழ்க்கை என்பதைத் தப்பாக உணர்ந்தவர்களுக்கும் இடையே உள்ளவர்கள் தான் அளவோடு பயன்படுத்தி வளமோடு இருப்பவர்கள். இந்த இடைப்பட்ட நபராகவே இதில் இருந்து வருகின்றேன்.

பெரும் பொறுப்புகளில் இருந்து கொண்டு நம் விருப்பம் சார்ந்த செயல்பாடுகள் என்று பட்டியலிட்டுக் கொண்டு அது நிறைவேறாத பட்சத்தில் சமூகத்தின் மீது, வாழும் வாழ்க்கையின் மீது, நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மேல் கோபப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை.

கடந்த ஐந்து வருடங்களில் ஏராளமான தோல்விகள் அது தந்த வலிகள். ஏராளமான ஏமாற்றங்கள் அதனோடு சேர்ந்து வந்த அவமானங்கள் என்று எல்லாவற்றையும் அனுபவித்துள்ளேன். சிறிது சிறிது என்னை மாற்றிக் கொண்டே வந்துள்ளேன். என் நடை,உடை,பாவனை, பேசும் விதம், உடல் மொழி என்று எல்லாவிதங்களிலும் கவனம் செலுத்தியுள்ளேன். முடிந்தவரையிலும் என்னைப் பற்றி அடுத்தவர்கள் சொல்லுகின்ற விமர்சனங்களின் மீது கவனம் செலுத்தியுள்ளேன். அடுத்தடுத்த நிலையை அடைய போராடியிருக்கின்றேன். அடைந்தும் உள்ளேன். ஆனால் ஒவ்வொன்றையும் விருப்பப்பட்டுச் செய்துள்ளேன். வாழ்கின்ற ஒவ்வொரு நாளையும், அது வெற்றியோ தோல்வியோ ரசனையோடு பார்க்க, வாழப் பழகியுள்ளேன். ஆற்ற முடியாத காயங்களோடு வாழ்பவர்களையும், உழைக்க முடியாதவர்கள் காட்டக்கூடிய பொறாமையையும், அடக்க முடியாத இச்சைகளுடன் இருப்பவர்களையும், என்ன தான் நெருக்கமாகப் பழகினாலும் கட்சி, மதம், சாதி ரீதியான கொள்கை வேறுபாடுகளை மனதில் வைத்துக் கொண்டு வன்மத்தோடு பார்ப்பவர்களையும் அமைதியாகக் கவனிக்கும் மனத்துணிவை பெற்றுள்ளேன்.

இதனை எழுத வந்த பிறகே நான் அதிகம் பெற்றுள்ளேன். இதன் காரணமாகவே இந்த எழுத்துலகப் பயணத்தை அதிகம் நேசிக்கின்றேன். கிடைக்க வேண்டிய அங்கீகாரம் என்பதனை எதிர்பார்க்காமல் நான் பார்க்கும் சமூகத்தை என் மொழியில் எழுதி வைத்து விவேண்டும் என்பதைத் தீரா வெறி போலத் தீர்க்க வேண்டிய கடமை எனக் கருதி கடந்த ஐந்து வருடமாக எழுதி வந்துள்ளேன்.

இணையத்தில் செய்து கொண்டிருக்கின்ற மார்க்கெட்டிங் யூக்திகளின் மேல் கவனம் செலுத்தாமல் உழைப்பின் மேல் நம்பிக்கை வைத்து இந்த எழுத்துலகப் பயணத்திற்காக ஒவ்வொரு நாளின் இரவிலும் தூக்கத்தைத் துறந்து இஷ்டப்பட்டு உழைத்துள்ளேன். இணையம் தான் எனக்கு எழுதக் கற்றுத் தந்தது. இணையத்தில் அறிமுகமானவர்களே வழிகாட்டியாய் இருந்தார்கள். வழி நடத்தினார்கள். விமர்சித்தவர்கள் கற்றுத்தந்த பாடத்தின் மூலம் அடுத்தடுத்து நகர்ந்து வந்துள்ளேன்.

(ஜுலை 3 2014)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *