1 இன்னும் எத்தனை பேருடா இருக்கிங்க?

தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புதுவயல் என்ற ஊர். எனது பிறப்பும் கல்லூரி படிப்பு வரைக்கும் வளர்ந்ததும் அங்கே தான். புதுவயலைச் சுற்றிலும் அறுபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உண்டு சுற்றியுள்ள கிராமங்களுக்கு புதுவயல் தான் தலைநகரம்.

ஊரின் எல்லைப்புறத்தில் எங்கள் வீடு உள்ளது. வீட்டுக்கருகே இருந்த சரஸ்வதி வித்தியாசாலை பள்ளிக்கூடத்தில் தான் எட்டாவது வரைக்கும் படித்தேன். மற்றொரு பள்ளிக்கூடமான இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாமவகுப்பு முடித்தேன். கல்லூரிப்படிப்பு காரைக்குடி அழகப்பச் செட்டியார் கலைக்கல்லூரியில் பயின்றேன்.

நான்காம் வகுப்பு வரைக்கும் எப்படி படித்தேன்? எப்படி வளர்ந்தேன் என்று இன்று என்னால் யோசிக்க முடியவில்லை. ஆனால் ஐந்தாம் வகுப்பு முதல் நடந்த சில சம்பவங்கள் இன்றும் என் நினைவில் உள்ளது.

முதல் நான்கு வகுப்புகளும் தரையிலேயே அமர வைத்துவிட்டு ஐந்தாம் வகுப்பு நுழைந்தவர்களைத் திடீர் என்று பெஞ்சில் அமர வைத்தால் எப்படி இருக்கும்? பைக்கட்டுகளை (பாடப்புத்தகங்கள்) வைத்துக் கொள்ள அறை போன்ற அமைப்பு எங்கள் மேஜையில் இருந்தது.

இது தான் ஐந்தாம் வகுப்பு. இனி இங்கே தான் நீங்கள் வர வேண்டும்” என்று வகுப்பாசிரியர் சொன்னதும் நான் முதல் ஆளாக ஓடி வந்து முதல் வரிசையில் உள்ள முதல் பெஞ்ச் இடம் பிடித்ததோடு என்னுடன் படித்த மற்ற இருவரான கோவிந்த ராஜனுக்கும், அனந்த ராமனுக்கும் இடம் பிடித்த மகிழ்ச்சியை இன்றும் கூட என்னால் உணர முடிகின்றது.

நாங்கள் மூவரும் வித்தியாசமான கூட்டணி. முதல் மூன்று ரேங்க் எடுக்கும் நாங்கள் ஒன்றாகத்தான் இருப்போம். எங்கள் கூட்டணியை எந்தச் சக்தியால் பிரித்து விட முடியும்?

எங்கள் வீட்டில் இருந்து அடுத்தச் சந்தில் தான் பள்ளிக்கூடம் இருந்தது. காலை ஒன்பது மணிக்கு பள்ளி தொடங்கும் போது வெளியே கட்டி வைத்துள்ள இரும்பு கம்பியைத் தட்டி ஓசை எழுப்புவார்கள். அந்த மணி சப்தம் எங்கள் வீட்டுக்கு கேட்கும். மணி அடித்ததும் தான் நாங்கள் வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும். நாங்கள் என்றால் நான், தம்பி, அக்காக்கள் என அத்தனை பேர்களும் ஒன்றாக கிளம்புவோம்.

என்னையும் சேர்த்து என்னுடன் கூடப்பிறந்தவர்கள் 13 பேர்கள். ஒரு சகோதரி சிறுவயதிலேயே இறந்து விட்டார். மீதி 12 பேர்கள். பெரிய குடும்பம். வசதிகளுக்கு பஞ்சமில்லை. நடுத்தரவர்க்கத்தின் அடுத்த கட்ட மேம்பட்ட நிலை. வயல், வீடு, சொந்தத் தொழில் என்று பணப்புழக்கத்திற்கு பஞ்சமில்லை. அதே போல தாத்தா மற்றும் பாட்டியின் உத்தரவின்படி வருடம் தோறும் குழந்தை பெறுவதை அப்பா மட்டுமல்ல எங்களுடன் கூட்டுக்குடித்தனமாய் இருந்த சித்தப்பாக்களும் தங்கள் கடமையாக வைத்திருந்தார்கள். இததவிர வீட்டில் பணிபுரியும் வேலை ஆட்களையும் சேர்த்தால் ஒவ்வொரு பொழுக்கும் நாற்பது பேருக்கும் சமைக்கும் அளவுக்கு வீடே எப்போதும் கல்யாண வீடு போல இருக்கும்.

தினந்தோறும் பள்ளியின் முன்னால் உள்ள மகிழம்பூ மரத்தடித்தடியில் புளியங்கொட்டை வைத்து ஆடும் ஆட்டம் களைகட்டி விடும். என்றைக்கோ ஒரு நாள் அம்மாவிற்கு தெரியாமல் பள்ளி நேரம் தொடங்குவதற்கு முன்னால் சென்று பை நிறையசம்பாரித்துவந்து விடுவதுண்டு. நான் போட்டுள்ள கிழிந்த டவுசரின் உள்ளே இருக்கும் பையில் விளையாடி ஜெயித்த புளியங்கொட்டை நிரம்பி வழியும். பிரசவ வயிறு போல் தனியாகத் தெரியும். என் உடன் படித்த சகோதரி உதவிக்கு வருவார். வீட்டுக்கு வந்து அப்பாவிடம் போட்டுக் கொடுக்காமல் இருக்க அவருக்குலஞ்சம்” கைமாறி எனது பெருத்த டவுசர் பை சிறிதாக மாறிவிடும்.

எங்கள் பள்ளிக்கு சுற்றிலும் உள்ள கிராமத்தில் இருந்து தான் பெரும்பான்மையான மாணவர்கள் வருவார்கள்.

அவர்கள் அத்தனை பேர்களும் ஏதோ ஒரு வகையில் கதாநாயகனாகத்தான் எனக்குத் தெரிந்தார்கள். எல்லாம் தெரிந்தது போல் பேசும் அவர்களின் பேச்சுக்களும், அவர்கள் நேற்று பார்த்த திரைப்படத்தின் சாகசமும் குறித்து என்னால் கேட்கத் தான் முடியும்.

ிரை அரங்கத்திற்குச் சென்று படம் பார்ப்பது என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அப்பாவின் கண்டிப்பு அப்படிப்பட்டது.

எங்கள் வீட்டில் இருந்து நான்கு சந்துகள் தாண்டி டூரிங் டாக்சி இருந்தது. அதன் பெயர் ஜெய செல்வாம்பிகை. கருவேல மரங்கள் நிறைந்த இடத்தஅழித்து டெண்ட் கொட்டாய் போன்ற வடிவத்தை உருவாக்கியிருந்தார்கள். படம் தொடங்குவதற்கு முன், படம் ஆரம்பிக்கப் போகின்றது என்பதற்கு அறிகுறியாக சில தனிப்பட்ட பாடல்கள் வைத்திருப்பார்கள். மாலை வேலையில் ஒலிக்கும் அந்த மாதிரியான பாடல்களை இன்று கேட்கும் போது ஊர் ஞாபகம் எனக்கு வந்து விடும். சீர்காழி கோவிந்த ராஜன், டிஎம்ஸ் ன் பக்தி பாடல்களை மட்டும் தான் நான் மட்டுமல்ல என் சகோதர, சகோதரிகளும் கேட்க முடியும். படம் பார்ப்பது என்பது எங்கள் அப்பாவைப் பொறுத்த வரையிலும் தடை செய்யப்பட்ட ஒன்று.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி தொடங்கும் முன் வீட்டில் உள்ள அத்தனை பேர்களையும் பள்ளிச்சீருடைக்கு துணி எடுப்பதற்காக ஊரில் உள்ள துணிக்கடைக்கு அழைத்துச் செல்வார். காவல்துறை அணிவகுப்பு போலவே நடக்கும். மொத்த கூட்டத்தையும் அழைத்துக் கொண்டு ஊரில் கடைத் தெருவின் வழியே பிரேமா ஸ்டோர் என்ற கடைக்கு அழைத்துசசெல்வார். அங்கே யாரும் எதுவும் பேசக் கூடாது. அமைதியாய் வரிசையாய் நிற்க வேண்டும்.

ஒவ்வொருவரின் அளவு பார்த்து துணிக்கடையில் பணிபுரிபவர் டர் டர் என்று நீல நிற கனமான துணியை கிழித்து எடுத்து ஒவ்வொன்றையும் அவரவர் பெயர் சொல்லி தனியாக எடுத்து வைப்பார்.

இந்த நிறம் தான் பள்ளியின் உடை. எடுக்கப்படும் கனமான பள்ளிச் சீருடை துணியென்பது சாக்கு போல இருக்கும். வீட்டில் இருந்து நாங்கள் செல்வதற்கு முன்பே தம்பி அங்கே அனுப்பி வைக்கப்படுவான். அந்தத் துணிக்கடையில் தகவல் சொல்லி விடுவான். பிறகென்ன அந்தச் சின்னப் பிரேமா ஸ்டோர் எங்கள் வீட்டு உறுப்பினர்களின் மொத்த கொள்ளவும் தாங்க வேண்டுமே?

பிரேமா ஸ்டோர் கடையின் முன்னால் உள்ள தையல்காரரிடம் அடுத்து அளவு கொடுக்க வரிசையாக நிற்க வேண்டும். “செல்வி” தையல்காரரிடம் அளவு காட்ட அட்டென்ஷன் பொஸிஷனில் ஒவ்வொருத்தராக வந்து நிற்க வேண்டும். அப்பா ஒவ்வொருவரையும் வரிசையாக அழைப்பார். அவர் அழைத்த நபர் மட்டும் தையல்காரரிடம் போய் நின்று அளவு கொடுக்க வேண்டும். சகோதரிகளுக்கு பாவாடை என்றாலும் அதே தான். எங்களுக்கு டவுசர் என்றாலும் அதே தான்.

துவைக்கும் போது தான் அம்மா கதறுவார்ஏண்டா தூங்கும் போது மூத்திரமவந்தால் எந்திரிச்சு தொலைக்க வேண்டியது தானே? பொணம் மாதிரி கணக்குது” என்பார்.

என்ன செய்வது பயத்திற்குத் தெரியுமா? மூத்திரம் என்பதும் மலம் என்பதும். எதைக் கேட்டாலும் குற்றம். எங்கு நின்றாலும் குற்றம் என்ற போது வளர்ந்து வாலிபனாக வந்த போதும் கூட அப்பா அனைவரையும் பயத்தில் தான் வைத்திருந்தார்.

எங்களுக்கு பள்ளிப் பாடங்களை படிப்பது மட்டும் தான் தலையாயக் கடமை. சகோதரிகள் படிப்பில் மணியாய் இருந்தார்கள். இது தவிர படிக்காத எங்களை அப்பாவிடம் காட்டிக் கொடுப்பதிலும் கில்லாடியாய் இருந்தார்கள். அப்பா இரவு வீட்டுக்குள் ுழைந்தவுடன் அனைவரும் அவர் முன்னால் போய் நிற்க வேண்டும். ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டே வருவார்.

வருகை பதிவேடு முடிக்க ட்ரம்ஸ் சிவமணி கச்சேரி நடக்கும். அப்பா அடிக்க ஓங்கும் போது அடுத்த அறையில் உள்ள நெல் கொட்டி வைக்க பயன்படுத்தும் குதிருக்குள் போய் ஒன்றன் பின் ஒன்றாக ஒளிந்து கொள்வோம். ஆனால் அப்பா துழாவிக் கொண்டு வந்து விடுவார். அவர் காலால் துலாவி அதற்கு மேல் கையில் வைத்துள்ள குச்சியால் இனம் கண்டு பதுங்கு குழிக்குள் இருக்கும் எங்களை வெளியே இழுத்து விடுவார். தீர்ப்பு உடனே வாசிக்கப்படும்.

எங்களின் எந்த அழுகையும் ெளியே கேட்காது. எதற்கும் எவர் ஆதரவு கரம் கிடைக்காது. காரணம் அப்பாவின் முன்கோபம் அப்படிப்பட்டது. எங்களின் படிப்பு முக்கியம் என்றால் அதைவிட முக்கியம் தினசரி எங்களுக்கு அப்பாவால் வழங்கப்படும் வேலைகள். அதனை முடித்தே ஆக வேண்டும்.

எங்களுக்கு பள்ளி ஆண்டு விடுமுறை என்றால் வீட்டு வேலைகள் பார்க்கப்பட வேண்டும் என்று அர்த்தம். எங்கள் கடைக்குச் செல்ல வேண்டும் ஒட்டடை கம்புகளுடன் சென்று கடையின் ஆதி முதல் அந்தம் வரைக்கும் சுத்தப்படுத்த வேண்டும். கடைக்குப் பின்னால் உள்ள தோட்டத்தில் உள்ள தேவையற்ற செடிகளை வெட்டி சுத்தப்படுத்த வேண்டும். எங்கள் வீட்டில் ஒரு மிதிவண்டி உண்டு. ஆனால் நாங்கள் எடுத்து அதனை ஓட்ட அனுமதி கிடைக்காது. வீட்டுக்கும் கடைக்கும் ஒரு கிலோ மீட்டர் என்றாலும் நடந்தே தான் செல்ல வேண்டும்.

எங்களுக்கு கிடைக்காத சைக்கிளை சபித்துக் கொண்டே நடந்து வருவோம். எங்கள் வயல் மணியாரம்பட்டி என்ற கிராமத்தில் இருந்தது. எங்கள் வீட்டில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும் நடந்து தான் செல்ல வேண்டும். வயலுக்குச் சென்று நாற்று நட்டவர்களின் கணக்கு வாங்கி வரவேண்டும். அப்பா வாங்கியுள்ள கடன்கார்களுக்கு மாதந்தோறும் கட்ட வேண்டிய வட்டிப் பணத்தைக் கொண்டு போய் கொடுக்க வேண்டும். அம்மா தினந்தோறும் சமையலறையில் அல்லாடிக்கொண்டுப்பார். விறகடுப்பு தான். திருவண்ணாமலை தீபம் போல அடுப்பு எறிந்து கொண்டே இருக்கும்.

அடுத்தடுத்து பிறந்த குழந்தைகளின் அழுகுரல்களை அரவணைத்து அழுகையை நிறுத்துவது அக்காக்கள் மட்டுமே. சகோதரிகளின் சின்னச்சின்ன ஆசைகள் சிறகடித்து பறக்குமே தவிர அது தீர்க்கப்படாத ஒன்றாகவே இருக்கும். ஓவ்வொரு வாரமும் சந்தைகக்கு வருகின்ற கிளிப்,டேப்,பவுடர் டப்பா போன்ற சமாச்சாரங்கள் மாட்டி கையில் தூக்கி வருகின்ற அந்த வயதான பெரியவர் தான் அவர்களின் கதாநாயகன். சகோதரிகளுக்கு வீட்டு வாசல்படியைத் தாண்ட அனுமதியில்லை.

ஒவ்வொரு நாளும் மாலை பள்ளிவிட்டு திரும்பியதும் எங்களுக்கு வழங்கப்படும் காபிக்கு நாங்கள் வைத்த பெயர் வங்காள விரிகுடா. அரை லிட்டர் பாலில் மூன்று லிட்டர் தண்ணீர். சற்று தூக்கலான கருப்பட்டி. இன்னும் கொஞ்சம் ஊற்றுமா என்று கேட்கும் தம்பி தான் அன்றைய வில்லன்.

என்னுடன் படித்த ஒவ்வொரு நண்பர்களுக்கும் ஒவ்வொரு விதமான பட்டப்பெயர்கள். ஒருவன் பெயர் பலாப்பழம். காரணம் அவன் அப்பா சந்தையில் பலாப்பழக்கடை வைத்திருந்தார். பலாப்பழக்கடை ரவி கையில் வைத்துள்ள சின்னக்கத்தியை காட்டியே எங்களை மிரட்டியே காரியம் சாதிப்பான்.

என் ஜாதிக்காரன் என்ன செய்வான் தெரியுமில்ல? என்ற பன்னீர் செல்வம் எழுதாத வீட்டுப்பாடத்தை என்னை வைத்து எழுதி வாங்கி விடுவான். இலங்கையில் இருந்து அகதியாய் உள்ளே வந்த நண்பனின் பெயர் சிதம்பரம். அவன் பேசும் அரசியல் பேச்சுகளும் கேட்பதற்கு சுவராசியமாய் இருக்கும்.

அவர்கள் சொல்லும் திரைப்படச்சமாச்சாரங்கள் முடிவுக்கு வரும் போது என் பையில் இருக்கும் பத்துப்பைசா அவன் கைகளுக்கு போய்விடும். ஆனால் இத்தனையும் மீறி எங்கள் அத்தனை பேர்களுக்கும் ஒரு கனவுக் கன்னி பள்ளியில் இருந்தார். எங்கள் மேஜைக்கு அருகே அன்புக்கரசி பார்க்கும் பார்வையில் ஆயிரம் அர்த்தம் இருக்கும். எனக்கு புரிந்தால் தானே? எனக்கு அவளின் பார்வை புரிந்த போது என்னுடைய இரண்டாவது ரேங்க் அவளிடம் சென்றுருந்தது. என்னுடன் கூடப் பிறந்தவர்கள் வருடந்தோறும் அடுத்தடுத்து ள்ளிக்கு வந்த காரணத்தினால் எப்போதும் என் வகுப்பாசிரியர் என்னிடம் நக்கலாக கேட்ட கேள்வி இன்றும் என் நினைவில் உள்ளது.

வருடந்தோறும் ஒவ்வொரு ஆளா வர்றீங்க? இன்னும் எத்தனை பேருடா இருக்கிங்க? . ( ஜுலை 14 2009)

License

பயத்தோடு வாழப் பழகிக் கொள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *