13 இதுவும் கடந்து போகும்

நான் வாழ்ந்த சமூக வாழ்க்கை முழுவதும் கரடுமுரடாகத் தான் இருந்து இருக்கிறது. இன்று வரையிலும் சமதளப் பயணம் அமைந்ததே இல்லை. எதிர்பார்த்ததும் இல்லை. குடும்பத்தினர்க்கு இதில் எந்தச் சம்மந்தமும் இல்லை. முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவந்த குஞ்சு போல் வெளி உலகத்தை அளந்து பார்த்து விடவேண்டுமென்று அலைந்து திரிந்து பெற்ற சுய அனுபவங்கள்.

எட்ட முடியுமா? என்ற யோசிக்கும் போது கிடைத்த மேடுகளும், நம்முடைய திட்டமிடுதல் தவறாகப் போய்விடாது என்று எண்ணிக்கொள்ளும் சமயங்களில் இயல்பாகவே பள்ளமும் என்றும் கொண்டு போய்ச் சேர்த்து விட்டுள்ளது, வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் உருவான மாற்றங்கள் இன்று வரையிலும் ஏதோ ஒரு உருவத்தை உருவமாக்கிக்கொண்டே இருக்கிறது. இரண்டுபடிகள் கூடத் தொடர்ந்து ஏற அனுமதித்ததே இல்லை. ஒவ்வொரு சமயத்திலும் ஒரு படிக்கான வாய்ப்புகள் தான் இன்றைய வசதிகளை உருவாக்கி தந்துள்ளது.

திருப்பூர் ஆய்த்த ஆடைகள் ஏற்றுமதிக்கான பணி மற்றும் சொந்த ஏற்றுமதி நிறுவன தொழில் வாழ்க்கைக்கான ஏற்றத்தாழ்வில் கற்றுக்கொண்டது அத்தனையும் என்னைச் சார்ந்த சின்ன வட்டத்திற்குள் முடிந்து போனது. ஆனால் 2009 மே மாதம் இறுதியில் எந்த நோக்கமும் இல்லாமல் அல்லது தெரியாமல் இந்த வலை உலகத்திற்குள் நுழைந்து ஜுன் 3 தட்டுத்தடுமாறி வலையின் தொழில் நுட்பத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ளத் தெரியாமலேசித்தம் போக்கு சிவன் போக்குஎன்னைப் பற்றி யோசிக்க உருவானது இந்த எழுத்துப் பயணம். எழுதத் தொடங்கி இன்று முழுமையாக முதல் வருடம் நிறைவுக்கு வருகிறது.

மனதளவில், சொந்த வாழ்க்கை அளவிற்கு நெருங்கியவர்கள் அத்தனை பேர்களும், கடமையாக மிகத் தூரத்தில் இருந்து உரையாடி என்னை உற்சாகப்படுத்தியவர்கள், தொடக்கம் முதல் ஒவ்வொரு சமயத்திலும் உள்ளே வந்து என்னை எனக்கே புரியவைத்தவர்கள், என்று நீண்ட பட்டியல் உண்டு.

நடை,பாவனை,நோக்கம்,விருப்பம் எதுவும் தெரியாமல், மனதில் தோன்றியவற்றை எழுத கிடைத்த முதல் விமர்சனம் போல் என்னுள் தொடங்கி, திருப்பூரைத் தொடர்ந்து நாடு தாண்டி ஈழம் வரைக்கும் தொடர முடிந்தது.

வாசிப்பு அனுபவமும் வாழ்ந்த வாழ்க்கைப் பாடங்களும் எழுத அதிக உதவியாய் இருந்ததைப் போலவே ஒவ்வொரு தரமான விமர்சனங்களும் ஒழுங்கான பாதையை உருவாக்க காரணமாக இருந்தது. மீள் பதிவு என்று இம்சிக்காமல் நீள் பதிவு என்ற அவஸ்த்தையை மாற்றிக்கொள்ள முடிந்தது.

எத்தனை புத்திசாலித்தனம் காட்டினாலும் படிப்பவர்களுக்குப் புரிய வேண்டும். மொத்தத்தில் எளிமை நடை வேண்டும். அதை உணர எனக்கு 40 தலைப்புகள் தேவைப்பட்டது. தவறுகள் அதிகமாகச் செய்யும் போது தரமான பாதைகள் இயல்பாகவே தோன்றும். உணர்ந்து கொள்ள வேண்டியது நமது கடமை. உணர்த்தியவர்களுக்கு நன்றி.

ஓட்டுக்கள், விமர்சனம், படிப்பவர்கள், வருகையாளர்கள், உள்வாங்கிக் கொண்டவர்களின் தாக்கம், தரவரிசைப் பட்டியல் என்று எல்லாவகையிலும் வாழ்வில் முதல் முறையாக நூறு சதவிகிதம் அதிக மனநிறைவு அளித்த விசயம் கடந்த பத்து மாத எழுத்துக்கள். வாழ்வில் உருவாகும் ஒவ்வொரு நெருக்கடியான சூழ்நிலையும் நம்மிடம் உள்ள திறமையை வெளிக்கொண்டு வந்து விடுகிறது. நாமே உணராமல் வாழ்ந்து கொண்டுருந்த போதிலும்??

பள்ளிப் பருவம் முதல் படித்த எத்தனையோ எழுத்தாளர்களின் எழுத்துக்கள், பார்த்த பலரின் வாழ்க்கையில் வழி தவறிய பாதைகள் உருவாக்கியவைகள் என்று பார்த்து வந்தவனுக்கு எத்தனை சிந்தனைகளை உருவாக்கியதோ அதே போல் இரண்டு தளத்திலும் இதுவரையிலுமஎழுதிய எதுவும் வீணாகிப் போய்விடவில்லை, படிப்பவர்கள்வெறுக்கக்கூடிய” வகையிலும் எதையும் எழுதிவிடவில்லை. இன்று வரையிலும் பழைய தலைப்புகள் வரைக்கும் எப்படியே தேடி கண்டுபிடித்து உள்ளே வந்து கொண்டுருப்பவர்களுக்கும், தொடர்ந்து தங்கள் விமர்சனம் மூலம் ஊக்கமளித்த உள்ளங்களுக்கும் நன்றி.

2002 முதல் ஏற்றுமதி நிறுவன பணிக்கான சமயத்திலும், வீட்டில் இருந்த கணிணி மூலம் கண்ட வலை உலகம் என்பது முழுக்க முழுக்க ஆய்த்த ஆடை ஏற்றுமதிக்கான தொழிலுக்காகவே இருந்தது. இப்படி ஒரு மாய உலகம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டதே 2007 இறுதியில் மட்டுமே. ஆனால் அன்று வலைதளத்தில் வேறு எதையோ அவசரமாய்த் தேடிய போது கண்ணில் தெரிந்த தமிழ் மணம் குறித்து முழுமையாகத் தெரியாமல் எப்போது போல அந்நியச் செலவாணி வாழ்க்கை உள்ளே இழுத்து வைத்து இருந்தது. தமிழ் வலை உலக வாசிப்பு என்பது தனியாக ஏற்றுமதி தொழிலில் காலஊன்றிய பிறகு அமெரிக்காவின் வீழ்ச்சி படிப்படியாக ஒவ்வொரு தொழிலையும் தாக்க, இறுதியில் கரணம் தப்பிய நேரமான 2009 மே மாதம். தொடர்ந்து ஓடி வந்து கொண்டுந்த பண வாழ்க்கை மாறி கிடைத்த ஓய்வும் மனம் சார்ந்த வாழ்க்கையும் அறிமுகமானது. எழுதவும் முடியும் என்று உள்மனம் ொன்னது.

என்னுடைய எழுத்துக்கள் மற்றவர்களுக்கு என்ன தாக்கத்தை உருவாக்கியதோ ?

ஆனால் என்னுள் வளர்த்துக்கொள்ள வேண்டிய அத்தனை சகிப்புத்தன்மையை வளர்த்து நிதான போக்கை உருவாக்கி இருக்கிறது. ஆழ்ந்த யோசனைகளும், விவேகமும் சேர்ந்து இன்று முழுமையான அமைதியான மனிதனாக மாற்றியுள்ளது. எழுதுவதற்கு முன்பு இருந்த வாசிப்பு அனுபவமும், எழுதத் தொடங்கிய பிறகு உண்டான வாசிப்பும் மொத்தமும் வெவ்வேறாக இருக்கிறது.

புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டுருக்கும் தமிழர்களுக்கும், பணி நிமித்தமாக வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களுக்கும், இந்தத் தமிழ் வலை உலகமென்பது வரம். ஆனால் புத்தகங்களை மட்டும் வாசிக்க விருப்புவர்களும் இது ஒரு இம்சை. காரணம் வெகு நேரம் படிக்க முடியாத அவஸ்த்தை. தினசரி,வார,மாத இதழ்கள் கிடைக்கும் இடங்களில் வாழ்க்கை அமைந்தவர்களுக்கு இந்த வலை உலகத்தில் அத்தனை ஈர்ப்பு இருக்காது. ஆனால் எந்த வகையில் பார்த்தாலும் இந்த வலையின் வீச்சு என்பது வெகுஜன ஊடகங்கள் எட்டிப் பார்க்க முடியாத காடு மலை கடல் தாண்டி பயணிக்கக்கூடிய சக்தி வாய்ந்த அதி உன்னதமான ஊடகம் இது. உணர்ந்து எழுதுபவர்கள்பாக்யவான்கள்”

முள்ளிவாய்க்கால் போரின் இறுதியில் எழுதத் தொடங்கிய போது ஈழம் குறித்துத் தெரிந்தது எல்லாமே வெகுஜன ஊடகத்தின் பரபரப்புச் செய்திகள் மூலம் மட்டுமே. இதற்குள் நாம் நுழைந்து எழுதுவோம் என்று பெரிய ஆசைகள் இல்லாதவனுக்கு இயல்பாக அந்த வாய்ப்பு உருவானது. நான் தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட விசயங்கள் மற்றவர்களுக்கும் தேவையாய் இருக்கலாம் என்று தொடர்ந்த ஈழம் தொடர்பான விசயங்கள் முழுமையற்றதாக இருந்தாலும் சம காலத்தில் வந்த புத்தகங்களும் சொல்லாத பல விசயங்களைக் குறிப்புகள் போல உணர்த்த முடிந்தது. பல விதங்களிலும் புத்தக ஒத்துழைப்புக்கு தானாகவே வீடு தேடி வந்து உதவிய திரு. இராஜராஜன் (னம்) திரு. தோழர் அவர்களுக்கும் என்றென்றும் கடமைபட்டுள்ளேன்.

தொடக்கத்தில் நண்பர்கள் சுட்டிக்காட்டிய கவனமான பாதையில் கண் வைத்து இருந்த காரணத்தால் பரபரப்பு இல்லாத அமைதியாகத் தொடர முடிந்தது. குறிப்பிட்ட சமயத்தில் படிப்பவர்களில் 30 சதவிகித புலம் பெயர்ந்தவர்களின் வருகையும் கிடைத்த ஆதரவுகளும் என்றும் மனதில் நிற்கக்கூடியது. நம்பிக்கை தான் வாழ்க்கை. அதை மட்டுமே நம்பி எழுதியவனுக்கு நாரசாரமான விமர்சனங்கள் இல்லாமல் பலரும் உரையாடிய போது உருவாக்கிய தாக்கத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது.

பிரபாகரன் என்ற ஆளுமையை மட்டும் மையபபொருளாக வைத்துப் பரபரப்புப் படபடப்பு என்கிற ரீதியில் விற்றுத் தீர்த்த புத்தகங்கள் போல் அல்லாமல் ஈழம் என்பதன் மூலம் எங்கிருந்து தொடங்கியது?

இன்று வரையிலும் வலை உலகத் தொழில் நுட்பம் குறித்தும் இதன் சென்றடையும் வீச்சும் அதிகம் தெரியாதவனுக்கு அநேகம் பேர்கள் உதவியதைப் போலவே என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இந்த எழுத்தின் மூலம் மட்டும் அறிமுகமானவர்கள் நிறைய உதவிகளைச் செய்துள்ளார்கள். புத்தகம் என்பது வணிகம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பதால் இன்றைய சூழ்நிலையில் முடிந்து போனதாக நினைத்துக்கொண்டுருக்கும் ஈழம் தொடர்பான விசயங்கள் அத்தனையும் கேலிக்கும் கேள்விக்கும் உரியதாய் மாறியுள்ளது?

என்னுடைய எழுத்துக்களை ஆதரித்துத் தனிப்பட்ட முறையில் உரையாடிக்கொண்டுருப்பவர்களுக்கும், விமர்சனம் மற்றும் தங்களுடைய எழுத்துக்களுடன் இணைத்துக்கொண்டு கடத்திய கருத்துரையாளர்களுக்கும் எந்த வார்த்தையில் இங்கு எழுதிவைத்தாலும் நன்றியை தீர்க்க முடியாது.

இடுகை உலக எந்த வட்டத்திற்குள்ளும் சிக்காமல் வந்தவனுக்கு வழிமொழிந்த வாழ்த்துரைத்தவர்களுக்கும் நன்றி.

ஏதோ ஒரு சமயத்தில் நிச்சயம் இறந்து விடத் தான் போகின்றோம். நாம் விட்டுச் செல்வது குடும்பத்திற்கான நலன் என்பதோடு சமூகத்திற்கான பங்களிப்பு என்பதான ஏதோ ஒன்றை அவரவருக்குத் தெரிந்து வரையில், முடிந்த வரையிலும் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இடுகைக்காக நீங்கள் உழைத்து உழைப்பு ஊருக்கு பயன்படுகிறதோ இல்லையோ உங்கள் வாரிசுகளுக்கு ஒரு காலத்தில் பயன்படக்கூடும்.

தலைமுறை இடைவெளியினால் விலகிப் போன விசயங்கள் உங்களைப் பற்றி உங்கள் எழுத்துக்கள் மூலம் நீங்கள் இல்லாத போதும் கூடப் புரியவைக்கக்கூடும். ஒவ்வொரு எழுத்தாளர்களின் தாக்கமும் என்னை வளர்த்தது. இன்று வரையிலும் எத்தனையோ பேர்கள் வாழ்ந்து கொண்டுருக்கும் வாழ்க்கையையும் அவர்கள் தான் அர்த்தப்படுத்திக் கொண்டுருக்கிறார்கள்.

(ஜுன் 3 2010)

License

பயத்தோடு வாழப் பழகிக் கொள் Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.. All Rights Reserved.

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *