2 அப்பாவாக மாறும் போது நீ உணர்வாய்?

அப்பாவாக இருந்து பார்? அப்போது உன் அப்பாவின் உண்மையான நிறைகுறைகள் உனக்குப் புரியவாய்ப்பு கிடைக்கும்” என்று என் நண்பன் அறிவுரை சொல்வான். அவன் சொல்லும் போது அதன் வீர்யம் புரியவில்லை. இன்று மூன்று பெண் குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கும் போததான் என் அப்பா பெற்ற வலியும் வேதனைகளையும் என்னால் உணர முடிகின்றது.

இன்று கூட்டுக் குடித்தன வாழ்க்கை என்பது சிதைந்து போய் விட்டது. ஆனால் நான் கல்லூரி வரைக்கும் முதல் பத்தொன்பது வருடங்கள் கூட்டுக் குடித்தன வாழ்க்கையில் தான் வாழ்ந்தேன். வளர்ந்தேன். வீட்டை ிட்டு வெளியே வந்து சமூகத்தைப் பார்த்த போது உலகத்திற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லாமல் புதிய பிறவி கண்ட குழந்தை போல் மலங்க மலங்க விழிக்கத்தான் முடிந்தது. கல்லூரி படிப்பு, தட்டெழுத்து, சுருக்கெழுத்து, இன்னும் பலவற்றை கற்று வைத்து இருந்த வித்தைகள் ஏதும் என்னை கை தூக்கி விடவில்லை. முக்கியமாக மனிதர்களை புரிந்து கொள்ள வேண்டிய விசயங்களில் சராசரிக்கும் கீழே இருந்த காரணத்தால் ஒவ்வொரு இடத்திலும் அதிக அடி வாங்க வேண்டியதாக இருந்தது.

மனிதர்களின் தந்திரங்களை புரிந்து கொள்ளத் தெரியவில்லை. அவர்கள் செயல்படுத்தும் மார்த்திய செயல்பாடுகளை கற்றுக் கொள்ள முடியவில்லை. வித்தியாசங்களை உணர்ந்து கொள்ளத் தெரியாமல் தடுமாறினேன். வெளிப்படையாக பேசும் பழக்கமும், இயல்பாக இருந்த முன் கோபமும் ஒவ்வொரு சமயத்திலும் என்னை கீழே இழுத்து விட்டுக்கொண்டேயிருந்தது.

மாற்றவும் முடியவில்லை. என்னமாற்றிக்கொள்ளும் சூழ்நிலையில் வாழவும் அதிர்ஷடம் நெருங்கி வரவே இல்லை. அப்போது தொடங்கியது தான் என் அப்பாவின் மேலே உள்ளே வெறுப்பு?

அப்பா?

இந்தச் சொல்லின் அர்த்தம், மகத்துவம் போன்றவற்றை முழுமையாக உணரத் தொடங்கியது முப்பத்தி மூன்று வயதில் தான். அப்போது தான் எங்கள் முதல் இரட்டைக் குழந்தைகள் பிறந்தார்கள். அவர்கள் வளரும் போது என் வாழ்க்கை மாறியது. வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுக்கத் தொடங்கியது.

காரணம், ஊரில் வாழ்ந்த முதல் பத்தொன்பது வருட வாழ்க்கையில் வீட்டில் வாய் திறக்கும் இரண்டே தருணங்கள், ஒன்று பாடங்கள் படிக்கும் போது, மற்றொன்று சாப்பிடும் போது. வீட்டில் உறுப்பினர்கள் அதிகம் என்பதால் என்ன சண்டை? எப்போது? எதனால் வருகின்றது? என்பதைத் தடுக்க அப்பா போட்ட சட்டத்தினால் வீட்டுக்குள் அமைதியாகவே வெளியுலகம் தெரியாமலேயே வளர்க்கப்பட்டோம்.

சின்னச்சின்ன பறிமாறல்கள், உரசல்கள் இருந்தாலும் எட்டப்ப சகோதரிகள், இரவு கடையை மூடிவிட்டு அப்பா வந்ததும் மறக்காமல் சொல்லிவிட்டுத்தான் படுக்கவே செல்வார்கள். வாங்கிய குட்டுகளும், வரும் கண்ணீர்க்கும் அங்கு ஆறுதல் தேட முடியாது. காரணம் இரவு பத்து மணி என்பது வீட்டில் இரண்டாவது ஜாமம். அம்மா என்பவள் வரிசையாகக் குழந்தை பெற்றுக்கொடுக்கும் இயந்திரம். அனைத்து வீட்டு வேலைகளையும் மறுக்காமல் அலுக்காமல் செய்து முடிக்க வேண்டிய வேலைக்காரி, சின்னம்மாக்களின் அவவ்போது தந்திரங்களைப் புரிந்து கொள்ளத் தெரியாமல் நடு இரவில் திடும் திடும் என்று அப்பா கொடுக்கும் அடி, உதைகளை வாங்கிக்கொண்டு அப்போது பிறந்து இருக்கும் தம்பியோ தங்கையையோ அழவிடாமல் வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயச் சூழ்நிலையில் இருந்தார். மனித உணர்வுகள் என்பதை என்னவென்றே அறியாத ஜீவன்.

அப்பா தூங்க வந்த பிறகு குண்டூசி சத்தம் கூட வீட்டுக்குள் கேட்கக்கூடாது. அவர் ுறட்டை மட்டும் எதிரொலி போல வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும். எத்தனை மணிக்கு அம்மா தூங்குவார்? என்று தெரியாது. ஆனால் அவர் மாட்டுத் தொழுவத்தில் பால் கறந்து கொண்டுருக்கும் போது காலை ஐந்து மணிக்குள் இருக்கும்.

கிராமம் போல இருந்த எங்கள் ஊர் நான் கல்லூரி படிப்பு படித்து முடிப்பதற்குள் சிறிய நகரமாக மாறியது. சில அரிசி ஆலைகள் இருந்த ஊரில் நூற்றுக்கணக்கான அரிசி ஆலைகள் உருவானது. ஆட்களின் முகமும் அவரவர்களின் வசதிகளும் ஊதிப் பெருக்கத் தொடங்கியது. அப்பாவால் தன்னை மாற்றிக் கொள்ள முடியவில்லை. காலப் போக்கில் உருவான கருத்து வேறுபாடுகள் சித்தப்பாக்களின் குடும்பம் தனியாக பிரிந்து சென்றது. சொத்துக்கள் பிரிக்கப்பட்டது. நாங்கள் அத்தனை பேர்களும் கல்லூரி படிப்பு முடித்ததும் வெவ்வேறு திசைக்கு பயணமானோம். எங்கள் குடும்பத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் எந்த சிபாரிசும் இன்று அவரவர் திறமையில் அரசுப் பணியில் சேர்ந்தனர். வெவ்வேறு துறைகள். நான் மட்டும் விதிவிலக்காக மேற்கொண்டு படிக்க பிடிக்காமல் திருப்பூர் வந்து சேர்ந்தேன். அதன் பிறகே என் உண்மையான வாழ்க்கை தொடங்கியது.

இந்தச் சமூகத்தை, மனிதர்களை முதன் முறையாக உற்று நோக்க ஆரம்பித்தேன். அப்பா என்னில் உருவாக்கி வைத்துருந்த பிம்பங்களை, வார்ப்புகளை உடைக்கும் பணியும் தொடங்கியது. திருப்பூர் வந்து பத்தாண்டுகள் கழிந்த பிறகு என் திருமணம் நிகழ்ந்தது.

(ஜுலை 3 2009, வலைபதிவில் எழுதப்பட்ட முதல் பதிவு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *